துபாயில் கொத்தடிமைகளாகத் தவிக்கும் தமிழர்கள்! - ராமநாதபுரம் ஆட்சியரிடம் முறையீடு

ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 7 தமிழர்கள் துபாயில் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

 ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 7 தமிழர்கள் துபாயில் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

துபாய் நாட்டில் கொத்தடிமைகளாக உள்ள தொழிலாளர்களை மீட்க கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே கொல்லன்தோப்புப் பகுதியைச் சேர்ந்த கே.வெள்ளைச்சாமி(38), மண்டபம் வேதாளை பகுதியைச் சேர்ந்த வெ. ரமேஷ்(34), விருதுநகர் மாவட்டம் ஆவுடையார்புரத்தைச் சேர்ந்த முகம்மது கசாலி(25), கடலாடி தாலுகா பனிவாசல் கிராமத்தைச் சேர்ந்த தி.ரமேஷ்(33), ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தில் உள்ள சக்திபுரம் பகுதியைச் சேர்ந்த எஸ்.சரவணன்(39), ராமநாதபுரம் அருகே அவத்தாண்டைக் கிராமத்தைச் சேர்ந்த காசி(39), ராமநாதபுரம் அருகே நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம்(37) ஆகிய 7 பேரும் துப்புரவுத் தொழில் செய்வதற்காக ஏஜென்ட் மூலம் ரூ.65 ஆயிரம் பணம் செலுத்தி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாய் சென்றுள்ளனர்.

மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் சம்பளம் தருவதாகக் கூறி அழைத்துச் சென்ற முகவர், துபாய் சென்றவுடன் சொன்னபடி சம்பளம் கொடுக்கவில்லை. மேலும், மூன்று வேளையும் உணவு வழங்காமலும், குடிப்பதற்குத் தண்ணீர் மட்டும் கொடுப்பதாகவும் அங்குள்ள 7 பேரும் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் தங்களது குடும்பத்தினரிடம் செல்போன் வாயிலாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜனை நேரில் சந்தித்துக் ககோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், `துபாயில் கொத்தடிமைகளாக இருந்து வரும் தங்கள் உறவினர்கள் 7 பேரையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் துபாய்க்கு அழைத்துச் சென்ற முகவர் மீது உரிய குற்ற நடவடிக்கை எடுக்குமாறும்’ அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!