வெளியிடப்பட்ட நேரம்: 21:42 (14/05/2018)

கடைசி தொடர்பு:21:42 (14/05/2018)

பந்துவீச்சில் அசத்திய பெங்களூர்! 88 ரன்களுக்கு ஆட்டமிழந்த பஞ்சாப் #KXIPvsRCB

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 88 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 88 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

பெங்களூர் வீரர்கள்

Photo Credit: Twitter/IPL

இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணியின் இன்னிங்ஸை கெயில் மற்றும் ராகுல் ஆகியோர் தொடங்கினர். இதே இந்தூர் மைதானத்தில் கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் மோதிய கடந்த போட்டியில் 400 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டதால், இந்தப் போட்டியிலும் ரன் மழை பொழியும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பெங்களூர் பந்துவீச்சாளர்கள் தகர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்த நிலையில், 21 ரன்கள் சேர்த்திருந்த கே.எல்.ராகுல் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் திணறிக் கொண்டிருந்த கெயிலும், அதே ஓவரில் ஆட்டமிழந்தார். கெயில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். 

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்களூர் வீரர்கள் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல், பஞ்சாப் வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். ஃபீல்டிங்கிலும் பெங்களூர் வீரர்கள் கலக்க, பஞ்சாப் அணி 15.1 ஓவர்களில் 88 ரன்களில் ஆட்டமிழந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவே குறைந்தபட்ச ஸ்கோராகும். பெங்களூர் தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பஞ்சாப் தரப்பில் 3 வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை.