வெளியிடப்பட்ட நேரம்: 22:10 (14/05/2018)

கடைசி தொடர்பு:22:10 (14/05/2018)

`பியூஷ் கோயலுக்குக் கூடுதல் பொறுப்பு!’ - மத்திய அமைச்சரவையில் 4 மாற்றங்கள்

நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்குச் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருக்கும் சூழலில் மத்திய அமைச்சரவையில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்குச் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருக்கும் சூழலில் மத்திய அமைச்சரவையில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

அருண் ஜெட்லி

அருண் ஜெட்லி பூரண குணமடையும் வரையில், அவர் வகித்து வந்த நிதித்துறை பொறுப்பு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்குக் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோருக்குக் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தத் துறையின் அமைச்சராக இதுவரை ஸ்மிருதி இரானி பதவி வகித்து வந்தார். தற்போது அவரிடம் ஜவுளித்துறை அமைச்சர் பொறுப்பு மட்டும் இருக்கிறது. மேலும், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக எஸ்.எஸ்.அலுவாலியா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அந்தப் பதவியில் கே.ஜே.அல்போன்ஸ் இருந்து வந்தார். அதேபோல், குடிநீர் மற்றும் பொது சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து அலுவாலியா விடுவிக்கப்பட்டார். அமைச்சரவை மாற்றம் குறித்த மத்திய அரசின் முடிவுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். 

கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அருண் ஜெட்லிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஜெட்லியின் உடல்நிலை தேறி வருவதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் பூரண உடல் நலம் பெற பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்தியுள்ளனர்.