வெளியிடப்பட்ட நேரம்: 22:45 (14/05/2018)

கடைசி தொடர்பு:22:45 (14/05/2018)

`கோலி, பார்த்தீவ் அசத்தல்' - பஞ்சாபை எளிதில் வீழ்த்திய பெங்களூர் அணி! #KXIPvsRCB

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. 

photo credit:@ipl

ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் களமிறங்கியது. இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து வழக்கம் போல பஞ்சாப் அணியின் இன்னிங்ஸை கெயில் மற்றும் ராகுல் ஆகியோர் தொடங்கினர். வழக்கத்திற்கு மாறாக பஞ்சாப் வீரர்கள் பெங்களூர் பந்துவீச்சைச் சமாளிக்காமல்  தடுமாறினர். முதல் விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்த நிலையில், 21 ரன்கள் சேர்த்திருந்த கே.எல்.ராகுல் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் திணறிக் கொண்டிருந்த கெயிலும், அதே ஓவரில் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு பஞ்சாப் அணியை 15.1 ஓவர்களில் வெறும் 88 ரன்களுக்கு சுருட்டியது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவே குறைந்தபட்ச ஸ்கோராகும். பெங்களூர் தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பஞ்சாப் தரப்பில் 3 வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை.  

இதன்பின்னர் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு இந்த முறை பார்த்தீவ் படேலுடன், விராட் கோலி துவக்கம் தந்தார். எளிதான இலக்கை நோக்கிக்  களமிறங்கிய இக்கூட்டணி பஞ்சாப் பந்துவீச்சை எளிதில் சமாளித்தது. 8.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்து பெங்களூர் அணி வெற்றிபெற்றது. கோலி 48 ரன்களுடனும், படேல் 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதற்கிடையே இதே இந்தூர் மைதானத்தில் கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் மோதிய கடந்த போட்டியில் 400 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டதால், இந்தப் போட்டியிலும் ரன் மழை பொழியும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது. ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பை பெங்களூர் பந்துவீச்சாளர்கள் தகர்த்துவிட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க