முதல்வரை விமர்சித்து முகநூலில் பதிவு - நாமக்கல் இளைஞர் சிறையில் அடைப்பு...!

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனால் அந்த நபரின் குடும்பத்தார்கள் பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா தேவனபாளையம் மொளசி கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி பெயர் ஹியமலா. இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தினேஷ் தன்னுடைய முகநூல் பதிவில்  `இறயமங்கலம் பெருமாள் மலை அருகே 250 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த நிலத்தை வாங்குவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் தங்கமணியும் பினாமிகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று பதிவு செய்துள்ளார்.' இதையடுத்து பள்ளிப்பாளையம் காவல்துறையினர் தினேஷை கைது செய்து அவதூறு வழக்கு பதிவு செய்து திருச்செங்கோடு சப் ஜெயிலில் அடைத்தனர்.

இதுபற்றி கொங்கு நாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நலச்சங்கத்தின் மாநிலப் பொருளாளர் வேலுசாமி பேசியபோது,  ``இறயமங்கலம் பெருமாள்மலை அருகே விட்டம்பாளையம் ஜமீனுக்குச் சொந்தமான 250 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலங்களை அப்பகுதியில் குடியிருக்கும் தேவேந்திர குல வேளாளர்களும், வேட்டுவக்கவுண்டர்களும் விவசாயம் செய்து வருகிறார்கள்.

விட்டம்பாளையம் ஜமீன் வாரிசுதாரர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் தங்கமணி பேசி நீதிமன்றத்துக்குப் போய் வெள்ளியங்கிரி ஜமீனுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்திருக்கிறது. அதையடுத்து, அந்த நிலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் தங்கமணியும் வாங்க இருக்கிறார்கள். இது ஊர் அறிந்த உண்மை. நேரடியாக அவர்கள் பெயரில் வாங்க முடியாது என்பதால் பினாமிகளை தேடிக் கொண்டிருப்பதாக தினேஷ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இதையடுத்து, பள்ளிப்பாளையம் அ.தி.மு.க., நகரச் செயலாளர் வெள்ளியங்கிரி மூலமாக பள்ளிப்பாளையம் காவல்நிலையத்தில் வழக்கு கொடுக்க வைத்து தினேஷை கைது செய்து திருச்செங்கோட்டு சப் சிறையில் அடைத்துள்ளனர்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!