அடிக்கடி ரத்து செய்யப்படும் மயிலாடுதுறை - திருச்சி ரயில்கள் - ஆதங்கப்படும் பயணிகள்..! | peoples complaint train cancelled Mayiladuthurai - trichy route at Frequently

வெளியிடப்பட்ட நேரம்: 00:16 (15/05/2018)

கடைசி தொடர்பு:07:44 (15/05/2018)

அடிக்கடி ரத்து செய்யப்படும் மயிலாடுதுறை - திருச்சி ரயில்கள் - ஆதங்கப்படும் பயணிகள்..!

மயிலாடுதுறை - திருச்சி இடையே தினமும் எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் என ரயில்கள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் கட்டணம் அதிகம் என்பதாலும் போக்குவரத்து நெரிசலால் நீண்டநேரம் பயணம் செய்ய வேண்டியிருப்பதாலும் பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணங்களையே விரும்புகிறார்கள். மயிலாடுதுறையிலிருந்து திருச்சிக்கு இயக்கப்படும் ரயில்களில் எப்பொழுதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். இதற்கிடையே, கடந்த 13 மாதங்களாக இந்த இரண்டு ரயில்களுமே அடிக்கடி ரத்து செய்யப்படுவதாக பயணிகள் ஆதங்கப்படுகிறார்கள். 

மேலும் இந்த வழித்தடத்தில் எல்லா நாள்களும் ரயில்கள் இயக்கப்பட்ட வேண்டும், ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி இந்த ரயில்களை அடிக்கடி ரத்து செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் எனத் தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி அரசியல் கட்சியினர், வணிகர் சங்கங்கள், நுகர்வோர் அமைப்பினர் என பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய கும்பகோணம் அனைத்துத் தொழில் வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் சத்தியநாரயணன்  ``இந்த இரண்டு ரயில்களுமே மாசத்துக்கு 10 -15 நாள்கள்தான் ஓடுது. தினமும் இந்த ரயில்களுக்காக மயிலாடுதுறையிலிருந்து, திருச்சி வரைக்கு உள்ள எல்லா ரயில் நிலையங்களிலும் மாணவர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் உட்படப் பல தரப்பு பயணிகளும் காத்திருப்பது வழக்கம். 10 -15 நாள்  ரயில் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகுறதும் வழக்கமாயிடுச்சி. 

குத்தாலம் பக்கத்துல தண்டவாளத்துல பராமரிப்புப் பணிகள் நடக்குறதுனால ரயில் ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே அதிகாரிகள் எப்பொழுதுமே இதையே காரணமா சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஆனால், உண்மையான காரணம் இதுவல்ல. தனியார் பஸ் முதலாளிகளோட செல்வாக்குலதான் இந்த ரயில்களை அதிகாரிகள் ரத்து செய்றாங்க. இதே மெயின் லைன்லதான் சோழன் எக்ஸ்பிரஸ், ஜனசதாப்தி உள்ளிட்ட ரயில்கள் ஓடிக்கிட்டு இருக்கு. இதெல்லாம் ரத்து செய்யப்பட்றதில்லை. சென்னை - கன்னியாகுமரி வரைக்கும் ஏதாவது ஒரு இடத்துல எப்பொழுதும் பராமரிப்பு பணிகள் நடந்துக்கிட்டுதான் இருக்கு. தவிக்க முடியாத காரணங்களால் எப்பாயாவது ஒரு சில முறை தான் ரயில்களை ரத்து செய்வாங்க. ஆனால், மயிலாடுதுறை - திருச்சி ரயில்கள் பெரும்பாலான நாள்கள் ஓடுறதில்லை. இதுல ஏதோ ஒரு ரகசியம் இருக்கு” எனத் தெரிவித்தார். இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே வழி, பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து அனைத்து நாள்களும் இந்த ரயில்களை இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.