வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (15/05/2018)

கடைசி தொடர்பு:07:49 (15/05/2018)

மேலாளருக்கு எதிராக ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட போக்குவரத்து ஊழியர்கள்...!

தூத்துக்குடி அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களையும் அவர்களது குடும்பத்தையும், பொது மக்களையும் பாதுகாத்திட சட்ட விரோதமாகச் செயல்படும் தூத்துக்குடி கிளை மேலாளர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆட்சியர் அலுலகத்தில் குடும்பத்துடன் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களையும் அவர்களது குடும்பத்தையும், பொது மக்களையும் பாதுகாத்திட சட்ட விரோதமாகச் செயல்படும் தூத்துக்குடி கிளை மேலாளர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆட்சியர் அலுலகத்தில் குடும்பத்துடன் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து ஊழியர்கள்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக சி.ஐ.டி.யூ.  ஊழியர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் சுதர்சன், “தூத்துக்குடி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வரும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை ஓய்வின்றி, தொடர்ச்சியாக 3 அல்லது 4 டூட்டி அதாவது 12 நாள்கள் தொலைதூர ஊர்களுக்குப் பணிபுரிய நிர்பந்தம் செய்யப்படுகிறது. இதனால் பல போக்குவரத்துத் தொழிலாளர்கள் மனநிலை மற்றும் பணி நிலைமை மிகவும் பாதிக்கப்படுகிறது.

இக்கிளையின் மேலாளர் அபிமன்யூ என்பவர் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை தொடர்ச்சியான டூட்டிகளில் கட்டாயமாக ஈடுபடுத்துகிறார். இவ்வாறு தொடர்ச்சியாக ஓய்வில்லாமல் டூட்டி பார்ப்பதால் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்தக் கிளை மேலாளர் பொறுப்பேற்ற கடந்த 8 மாதத்தில் கட்டாய டூட்டி போடப்பட்டதால், 10-க்கும் மேற்பட்ட பெரிய விபத்துகளும், 65-க்கும் மேற்பட்ட சிறுவிபத்துகளும் நடந்துள்ளன. இதில், ஓட்டுநர் ஒருவர் உட்பட 10-க்கும் மேற்பட்ட உயிர்ப்பலி நடந்துள்ளது.

ஓட்டுநர், நடத்துநர்கள் விடுமுறை எனக் கேட்டால் பணி இடமாற்றம் செய்துவிடுவேன் என மிரட்டி வருகிறார். விடுமுறை எடுத்தால் ஆப்சென்ட் போட்டுச் சம்பளம் பிடித்தம் செய்வதும், தரக்குறைவாகப் பேசுவதால், தொழிலாளர்களைத் தற்கொலைக்கு செல்லும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். மேலாளர் அபிமன்யூ, கடந்த காலங்களில் காரைக்குடி, மதுரை, நெல்லை ஆகிய பணிமனைகளில் பணியாற்றியபோது, பல தொழிலாளர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்த செய்திகளும் செய்தித்தாள்களில் வெளியாகி உள்ளன.

இவரின் நடவடிக்கை தொடர்பாக பணிமனை மட்ட இயக்கங்கள் போராட்டம் நடத்தியும், நிர்வாகத்திடமும் பல முறை முறையிட்டும்  எந்த நடவடிக்கையும் இல்லை. ஓய்வற்ற நிலையில் தொடர் பணியினால், ஏற்படும் விபத்துகளால் பேருந்தில் பயணிக்கும் மக்களும், நடத்துநர், ஓட்டுநரின் குடும்பத்தினரும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுத்திட வேண்டும். இல்லாவிட்டால், அனைத்துப் போக்குவரத்து தொழிலாளர்களையும் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்திடுவோம்” என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க