`சவுக்கு மரங்களின் விலை தொடர் வீழ்ச்சி' - வேதனையில் விவசாயிகள்!

சவுக்கு மரங்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் இதனைச் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பெரும் வேதனையில் தவிக்கிறார்கள்.

தஞ்சை மாவட்டம் அம்மா பேட்டை, பாபநாசம், சாலியமங்கலம், அய்யம்பேட்டை பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கரில் சவுக்கு மரங்களைச் சாகுபடி செய்து அறுவடைக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் எதிர்பார்த்த விலை கிடைக்காததால் இவர்கள் பெரும் மன உளைச்சலில் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஒரு டன் சவுக்கு மரங்கள் 8 ஆயிரம் ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்பொழுது 2,500 முதல் 3,000 ரூபாய் தான் விலை கிடைக்கிறது. இந்த விலைக்கு விற்பனை செய்தால் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் எனக் கவலையோடு பேசுகிறார்கள் சவுக்கு பயிர் செய்துள்ள விவசாயிகள். 

காகித ஆலைகளுக்கு விற்பனை செய்தால் மிகவும் குறைந்த விலைதான் கிடைக்கும் என்பதால், கட்டுமான பணிகளுக்கு தங்களது சவுக்கு மரங்களை விற்பனை செய்வதையே விவசாயிகள் அதிகம் விரும்புவார்கள். இதற்கென உள்ள வியாபாரிகள் இதனை வாங்கிச் செல்வார்கள். கடந்த சில மாதங்களாக மணல் தட்டுப்பாட்டினால் கட்டுமான பணிகள் முடங்கிக் கிடக்கிறது. இதனால் சவுக்கு மரங்களுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால்தான் தற்பொழுது சவுக்கு மரங்கள் கடுமையான விலை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற சவுக்கு மரங்களைச் தமிழக அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள். இப்பிரச்னையை நிரந்தரமாகத் தீர்க்க, தமிழக அரசு நேர்மையான வழியில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மணல் தட்டுப்பாட்டினை போக்கி, கட்டுமான பணிகள் மீண்டும் வழக்கம் போல் முழுமையாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!