வெளியிடப்பட்ட நேரம்: 03:15 (15/05/2018)

கடைசி தொடர்பு:03:15 (15/05/2018)

கடந்த 4 ஆண்டுகள் இல்லாத அளவு நெல் கொள்முதல் அதிகரிப்பு – தூத்துக்குடி ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடி மாவட்டத்தில்  கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு,  இந்த ஆண்டு 4,692.36 மெட்ரிக் டன் நெல், விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.  

vengadesh-collector thoothukudiஒவ்வொரு ஆண்டும்  அறுவடை முடிந்த பின், அரசே நெல்லுக்கு குறிப்பிட்ட ஆதாரவிலை நிர்ணயித்து, விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து வருகிறது. துாத்துக்குடியில் இந்த ஆண்டு விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் மூலம், 4,692.36 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் குறைதீர் கூட்டத்தின் இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், “துாத்துக்குடியில் தேவையான அளவு இந்தாண்டு பருவமழை பெய்ததைப் போல, கடந்த வாரத்தில்  கோடை மழையும் அதிகமாகப் பெய்துள்ளது. அதிபட்சமாக, மணியாச்சியில், 129 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது. அதே போல் அடுத்த பருவ மழைக்கு தயாராகும் வகையில் ஆயத்தப்பணிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

கடந்த ஆண்டில், மாவட்டத்தில் 427 குளங்கள் துார்வாரப்பட்டு மழைநீர் சேகரிக்கும் வகையில் தயார் நிலையிலில் உள்ளன. இதில், 212 குளங்களில் இருந்து, 1.06 லட்சம் க்யூபிக் மீட்டர் கரம்பை மணல், தேவைப்படும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டு, 626 குளங்கள் துார்வாரப்பட உள்ளன. இந்த ஆண்டும் கரம்பை மணல் தேவைப்படும் விவசாயிகள், மாதத்தின் 1 மற்றும் 3 வியாழக்கிழமைகளில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு மூலம் தெரிவிக்கலாம்.

துாத்துக்குடியில் கடந்த  3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விவசாயகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் மூலம், சன்னரக நெல் (கிரேடு-1)  3761.84 மெட்ரிக் டன் மற்றும் பெரிய ரக நெல் (கிரேடு-2)  930.52 மெட்ரிக் டன் என மொத்தம் 4,692.36 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்  செய்யப்பட்டுள்ளது.

இதுவரை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. மக்களுக்கான குடிநீர் சீராக வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக, மாவட்ட நிர்வாகம் ஒவ்வொரு திங்கட் கிழமையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டு,  தொடர்ந்து பொதுமக்களின் குடிநீர் தேவையை கண்காணித்து பூர்த்தி செய்தும் வருகிறது. எனவே இந்தக் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு என்ற பேச்சிற்கே இடமில்லை” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க