`14 கோடி மோசடி செய்துவிட்டு தலைமறைவு' - தனியார் நிறுவனத்தால் பரிதவிக்கும் மக்கள்!

மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள்

ஆசையே அழிவுக்குக்  காரணம் என்றார் புத்தர். பணம் வைத்திருப்பவர்கள் இருக்கும் பணத்தை வைத்துக்  கொண்டு நேர்மையாகப்  பிழைக்காமல், ஒன்றுக்கு இரண்டு மடங்கு வட்டி தருகிறேன் என்று ஆசை வார்த்தையால்  மொத்த பணத்தையும் போட்டு விட்டு இன்னொருவர் சுருட்டி கொண்டு  ஓடிய பிறகு வேதனை அடைவது ஒரு புறம் இருந்தாலும், இப்படிப்பட்டவர்களின் பின்புலம் தெரிந்தும் காவல்துறையும், உளவுத் துறையும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
தமிழ்ச்செல்வன்

சேலத்தில் மிகப்பெரிய அளவில் பல கோடிகளை மோசடி செய்ததாக வின் ஸ்டார் சிவகுமார் என்பவர் சிறையில் உள்ளார். மக்களிடம் பல கோடிகளை ஏமாற்றியதால் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் உதவியாளராக இருந்தவர் தான் தமிழ்ச்செல்வன் . இவர் சேலம் நான்கு ரோட்டில் வசந்தம் லேண்ட் புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருவது சேலத்தில் அனைவருக்கும் தெரியும். இவர் தற்போது 14 கோடிக்கு மேல் சுருட்டி கொண்டு ஓடி விட்டதாகப்  புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட செல்வகுமார் என்பவர் பேசுகையில்,  ``நான் சேலம் நேரு நகரில் வசித்து வருகிறேன்.  சேலம் நான்கு ரோடு டி.வி.எஸ்., பஸ் ஸ்டாப் அருகே செயல்பட்டு வந்த வசந்தம் லேண்ட் புரமோட்டர்ஸ் அலுவலகத்தில் 1 லட்சம் போட்டால் 100 நாளில் 1 1/2 லட்சம் தருவதாக சொல்லி இருந்தார்கள். அதையடுத்து கஸ்டப்பட்டு சம்பாதித்த பணம் ரூபாய் 1 1/2 லட்சத்தை அந்நிறுவனத்தில் 18.7.2017-ல் முதலீடு செய்தேன். 100 நாளில் 2,25,000 தருவதாகச்  சொன்னார்கள். அதற்கான பத்திரம் எல்லாம் வைத்திருக்கிறேன். ஆனால் அந்த அலுவலகத்தை பூட்டிட்டு போயிட்டாங்க. எனக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை'' என்று கண்ணீர் விட்டார்.

வசந்தம் லேண்ட் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த இந்திரா,  ``நான் பழைய பேருந்து நிலையம் அருகே குடியிருக்கிறேன். நான் ப்ளஸ் 2 முடித்து விட்டு வேலை இல்லாததால் வசந்தம் லேண்ட் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். நான் 15-க்கும் மேற்பட்ட கஸ்டமரை சேர்ந்து விட்டிருக்கிறேன். எனக்குச்  சம்பளம் கூடத்  தரவில்லை. தற்போது உரிமையாளர் தமிழ்ச்செல்வன்  தலைமறைவு ஆகிவிட்டார். என் மூலமாக பணம் போட்டவர்கள் என்னை மிரட்டுகிறார்கள். அந்த நிறுவனத்தில் 150-க்கும் மேற்பட்டவர்கள் ஊழியர்களாகப்  பணியாற்றினோம். 300-க்கும் மேற்பட்டவர்களிடம் 14 கோடிக்கு மேல் பணத்தை சுருட்டிக்  கொண்டு தலைமறைவு ஆகி விட்டார். அவரை உடனே கண்டுபிடித்து பணத்தைப்  பாதிக்கப்பட்ட மக்களுக்குக்  கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அனைவரும் சாகும் நிலை உருவாகும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!