வெளியிடப்பட்ட நேரம்: 04:45 (15/05/2018)

கடைசி தொடர்பு:04:45 (15/05/2018)

`ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சட்டமன்றத்தில் குரல் எழுப்பப்படும்; - எம்.எல்.ஏ அபுபக்கர் பேச்சு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் சட்டமன்றக்  கூட்டத் தொடரில்  குரல்  எழுப்பப்படும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளரும், கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அபுபக்கர் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் சட்டமன்றக்  கூட்டத் தொடரில்  குரல்  எழுப்பப்படும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளரும், கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அபுபக்கர் தெரிவித்துள்ளார். 

அபுபக்கர்

தூத்துக்குடியில்  உள்ள ஸ்டெர்லைட் ஆலையை  நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், ஆலையின் விரிவாக்கத்திற்கு அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும்  குமரெட்டியாபுரம் கிராம மக்கள்   90 நாளுக்கும் மேலாகத் தொடர் போராட்டம்  நடத்தி  வருகின்றனர். இந்தக் கிராம மக்களைத் தொடர்ந்து தெற்கு வீரபாண்டியாபுரம், பண்டாரம்பட்டி, மடத்தூர், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட 21 கிராம மக்களும் கடந்த 50 நாட்களுக்கும் மேலாகத் கிராமங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சியினர், சமூக அமைப்புகள், மாணவர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் எனப் பல தரப்பினரும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் இன்று போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது மக்களுடன் போராட்டக் களத்தில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக  மூட  வலியுறுத்தி, ஆலையைச் சுற்றியுள்ள  கிராம மக்கள்  பல நீண்ட நாட்களாக தன்னெழுச்சியுடன் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இதில் 5 வயது சிறுவன் கூட ‘இழுத்து மூடு..  இழுத்து மூடு..  நாசக்கார ஸ்டெர்லைட்டை இழுத்து மூடு.., கேட்கலையா கேட்கலையா மத்திய மாநில அரசுகளே எங்கள் குரல் கேட்கலையா..” என உரத்த குரலில் கோஷம் எழுப்பியது  அனைவரையும் அதிர வைத்துள்ளது. இதன் கழிவால் நிலம், நீரில் ஏற்பட்ட பாதிப்புகளையும், உடலில் ஏற்பட்ட பாதிப்புகளையும் சொன்னார்கள்.  

இந்த ஆலையை மூடிட வலியுறுத்திக் கடந்த ஜூலை மாத சட்ட மன்றக் கூட்டத் தொடரில் நான் கோரிக்கை வைத்தேன்.  இந்த ஆலைக்கு எதிரான மக்களின் தொடர் போராட்டத்தைப் பார்த்த பிறகும், மத்திய, மாநில அரசுகள்  நடவடிக்கை  எடுக்கவில்லை. தமிழகத்தில் தற்போது செயல்படாத அரசுதான் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் சட்டமன்றக்  கூட்டத்தில் குரல் எழுப்பப்படும். தமிழகம் முழுவதும் மக்களின் போராட்டக் குரல்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு மக்களின் போராட்டங்களை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் அரசிற்கு மக்கள் வரும் தேர்தலில் தக்கப் பாடம் புகட்டுவார்கள்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க