தேனி மாவட்டத்தில் அதிகரிக்கும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்..!

தேனி மாவட்டத்தில், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சமீப காலமாக அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் வெவ்வேறு இடங்களில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த 7-ம் தேதி, மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடத்தி, மூன்று நாள்கள் தொடர் பாலியல் வன்கொடுமை செய்துவந்த சூர்யா என்பவர் கைதுசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம், தேனி மாவட்டத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த அதிர்வு ஓய்வதற்குள், நேற்று (13/05/18) சிறுமி ஒருவரை இருசக்கர வாகனத்தில் கடத்த முயன்ற இருவர் பிடிபட்டனர். அவர்கள், அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்ததும், கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இருவரும் உடனே கைதுசெய்யப்பட்டனர். இந்த இரு சம்பவத்திலும் சம்பந்தப்பட்டவர்கள், ’போக்ஸோ’ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேனி மாவட்டத்தில், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துவரும் சூழலில், இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், ‘’சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவது மிகவும் வேதனையளிக்கிறது. மக்களிடம் போதிய விழிப்பு உணர்வு உள்ளது. அதே நேரத்தில் வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு மூன்றாம் நபர் குறித்தும், அவர்களின் சீண்டல்களை இனம் கண்டுகொள்வதுகுறித்தும் சொல்லிக்கொடுக்க வேண்டும். இது ஒரு புறம் என்றால், கைதுசெய்யப்படும் குற்றவாளிகளுக்கு போலீஸார் பாரபட்சம் பார்ப்பது சமூகக் கேடானது. இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் காவல் உயர் அதிகாரிகள் நேரடியாகத் தலையிட்டு, குற்றவாளிகளை எந்த விதத்திலும் தப்பவிடாமல், கடுமையான தண்டனை வாங்கிக்கொடுக்க வழிவகை செய்ய வேண்டும்!’’ என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!