`திருவிழாவில் தாக்கப்பட்ட இரு பெண் காவலர்கள்' - கொலை மிரட்டல் விடுத்த ராட்டின ஒப்பந்தக்காரர்கள்!

தேனி மாவட்டத்தில், இரு பெண் காவலர்கள் ராட்சத ராட்டின ஒப்பந்தக்காரர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளைக் கைதுசெய்யாமல், காவல் உயர் அதிகாரிகள் மெத்தனம்காட்டுவதாக, காவலர்கள் புகார் கூறியுள்ளனர்.

சித்திரை மாத திருவிழாக்களில் பிரசித்திபெற்றது, தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் திருவிழா. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இத்திருவிழாவுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இதனால், கோயிலைச் சுற்றி கடைகள், பொழுதுபோக்கு அம்சங்களான ராட்டினங்கள் அமைப்பது வழக்கம். அதுவும், ராட்சத ராட்டினங்களே அமைக்கப்படும். முன்னர், இது போன்ற ராட்சத ராட்டினங்கள் அமைக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டதுண்டு. இந்நிலையில் நேற்று (13.05.18), கோயிலின் தெற்கு நுழைவு வாயிலில் இரண்டு பெண் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அங்கு வந்த ராட்டின ஒப்பந்தக்காரர்களான தேனியைச் சேர்ந்த நல்லம்மாள், அவரின் மகள் சுகன்யா, அவர்களின் கார் ஓட்டுநர் ஈஸ்வரன் ஆகியோர், தெற்கு வாயில் வழியாக நுழைய முயன்றனர். அதைத் தடுத்த காவலர்கள், ‘’இந்த வழியாக அனுமதி இல்லை. நேர் வழியாகச் செல்லுங்கள். இந்த வழியாகச் சென்றால், கோயிலுக்குள் கூட்டம் அதிகரித்துவிடும். அதனால், இந்த வழியாகச் செல்ல யாருக்கும் அனுமதியில்லை’’ என்று கூறியுள்ளனர். அதை ஏற்காத நல்லம்மாள் மற்றும் சுகன்யா, பெண் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில், பெண் காவலர்கள் இருவரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி, சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதைப் பார்த்த அருகில் இருந்த காவலர்கள் சிலர், நிலைமையைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

‘’கோடி ரூபாய் செலவு செய்து ராட்டினம் போட்டிருக்கேன். என்னை கோயிலுக்குள் செல்ல அனுமதிக்க மாட்டியா? கொலை செய்துவிடுவேன்!’’ என்று பெண் காவலர்களை மிரட்டியுள்ளனர். அனைத்தையும் உயர் அதிகாரிகளுக்கு எடுத்துச் சென்றும் எந்தப் பலனும் இல்லை. காவலர்களின் தொடர் அழுத்தத்தால், பெயருக்கு மூவர் மீதும் வழக்குப் பதிந்து, கார் ஓட்டுநர் ஈஸ்வரன் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் ஈடுபட்ட நல்லம்மாள் மற்றும் சுகன்யாவை ஏன் இதுவரை கைதுசெய்யவில்லை என்று கொதிப்போடு கேட்கிறார்கள் காவலர்கள்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!