`விளம்பரத்துக்காக மட்டும் ரூ.4,343 கோடி' - 4 ஆண்டுகளில் மோடி அரசு செலவுசெய்த தொகை!

2014-ம் ஆண்டு பதவியேற்றது முதல், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, விளம்பரத்துக்காக இதுவரை ரூ.4,343 கோடி செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. 

மோடி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்றது. அது முதல் டிஜிட்டல் இந்தியா கோஷத்துடன் மத்திய அரசு செயல்பட்டுவருகிறது. தூய்மை இந்தியா, ஜன் தன் யோஜனா, முத்ரா வங்கி கடன், மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. இதில், தூய்மை இந்தியா, ஜன் தன் யோஜனா போன்ற திட்டங்களுக்கு வீடு தோறும் போஸ்டர் ஒட்டாத குறையாக மத்திய அரசின் சார்பில் விளம்பரம் செய்யப்பட்டு மக்களிடம் சேர்க்கப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, விளம்பரத்துக்காக இதுவரை ரூ.4,343 கோடி செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த அணில் கல்காலி என்பவர், ஆர்.டி.ஐ மூலம் விளம்பரத்துக்காக மத்திய அரசு செலவுசெய்த தொகைகுறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தற்போது பதில் அளித்துள்ளது. 

அதில், ``2014-ம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு பதவியேற்றது முதல், கடந்த மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், விளம்பரத்துக்காக ரூ.4,343 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில், செய்தித்தாள்கள், டெலிவிஷன், இணையதளம், ரேடியோ, சினிமா, எஸ்எம்எஸ் மூலமாக விளம்பரப்படுத்தப்பட்ட செலவுகள் அடங்கும். நாளிதழ்களில் விளம்பரம் செய்ததற்கு ரூ.1732.15 கோடியும், மின்னணு ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்ததற்கு ரூ.2079.87 கோடியும், போஸ்டர், டிஜிட்டல் பேனர் ஆகியவை மூலமாக விளம்பரம் செய்ததற்கு ரூ.531.24 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மோடியை  `விளம்பரப் பிரியர்' என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவரும் வேளையில், தற்போது இந்த விவரங்கள் வெளியாகியுள்ளது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!