வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (15/05/2018)

கடைசி தொடர்பு:08:20 (15/05/2018)

`சிறுநீரகக் கோளாறுக்கு அறுவைசிகிச்சை' - மருத்துவமனையில் ட்ரம்ப் மனைவி மெலினியா அனுமதி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெலினியா சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மெலினியா

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மூன்றாவது  மனைவி மெலினியா. மெலினியா, சுலேனேவியா நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 12 வயதில் பரோன் என்ற மகன் உள்ளார். ட்ரம்ப், அதிபர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு மெலினியா முக்கியப் பங்கு வகித்தார். வெற்றிபெற்ற  பிறகு, அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்துடன் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என அரசு தொடர்பான பணிகளை மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் சர்வதேச அன்னையர் தினம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவருக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

இதையடுத்து நடைபெற்ற பரிசோதனையில், அவருக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பது தெரியவந்தது. இதனால், தற்போது சிறுநீரக அறுவைசிகிச்சை மேற்கொள்வதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ``மேரிலேண்டில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் மெலினியா அனுமதிக்கப்பட்டுள்ளார் . அவருக்கு அறுவைசிகிச்சை செய்வது தொடர்பான நடைமுறைகள் நடந்துவருகிறது . அவரது உடல்நிலை சீராக உள்ளது . விரைவில் அவர் நலம்பெற்று அரசுப்பணிகளைக் கவனிப்பார். மெலினியாவிடம் அதிபர் பேசியுள்ளார். விரைவில் அவர்  சந்திக்கலாம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

நீங்க எப்படி பீல் பண்றீங்க