வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (15/05/2018)

கடைசி தொடர்பு:08:30 (15/05/2018)

`சேஸிங்கில் சச்சினைவிட விராட் தான் பெட்டர்' - ஷேன் வார்னே பாராட்டு!

'சேஸிங்கில் சச்சின் சாதிக்காததை விராட் கோலி சாதித்துள்ளார்' என ஷேன் வார்னே புகழாரம் சூட்டியுள்ளார். 

விராட் கோலி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரும் ஆஸ்திரேலிய முன்னாள் பந்துவீச்சாளருமான ஷேன் வார்னே, ஆங்கில செய்தி சேனலுக்கு நேற்று பேட்டியளித்துள்ளார். அதில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து பெருமையாகப் பேசியுள்ளார். கோலி குறித்து கூறுகையில்,  ``இங்கிலாந்து தொடருக்காக விராட் முன்கூட்டியே இங்கிலாந்து செல்வது வரவேற்கத்தக்கது. கடந்த இங்கிலாந்து தொடரின்போது அவர் சிறப்பாக விளையாடாததால், அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம். ஆனால், இந்த முறை இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு கோலி சவாலாக இருப்பார். அதேபோல வரவிருக்கும் ஆஸ்திரேலிய தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.

ஆஸ்திரேலியாவில் கோலி ஆடுவதைக் காண நான் ஆவலாக இருக்கிறேன். கோலி ஒரு நாள் போட்டிகளில் சதங்களைக் குவித்து வருகிறார். குறிப்பாக, சேஸிங்கில் சதங்கள் அடித்து அணியை வெற்றிபெறவைத்துள்ளார். இது எந்த ஒரு வீரரும் செய்யமுடியாதது. ஏன் சச்சின்கூட இந்தச் சாதனையைச் செய்ய முடியவில்லை. சச்சின், லாரா இருவரும் எனது தலைமுறையின் சிறந்த வீரர்கள். தற்போதைய தலைமுறைக்கு கோலி, டி வில்லியர்ஸ் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இருவரையும் ஒன்றாக்கிப் பார்ப்பது அவ்வளவு எளிதானது அல்ல. கோலி இன்னும் 10 ஆண்டுகள் விளையாடினால், சச்சினை நாம் எந்த அளவுக்குப் புகழ்ந்து பேசுகிறோமோ, அதே அளவுக்கு அவரும் பேசப்படுவார். அதில் மாற்றுக்கருத்து இல்லை" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க