வெளியிடப்பட்ட நேரம்: 08:32 (15/05/2018)

கடைசி தொடர்பு:18:39 (15/05/2018)

``பார்வையில்லாத நானே டிவி, மிக்ஸி ரிப்பேர் பண்றேன். ஆனா...!’’ - மாற்றுத் திறனாளியின் நம்பிக்கை

``ஆர்வமும் விடாமுயற்சியும் இருந்தா எதையும் சாதிக்கலாம். சுத்தமா பார்வையில்லாத என்னாலேயே டி.வி, மிக்ஸி, ஃபேன், ஃபிரிட்ஜ்னு எல்லாவிதமான எலெக்ட்ரிக் பொருளையும் சரிபண்ண முடியுதுன்னா, ரெண்டு கண்ணும் நல்லா தெரியுறவங்க எவ்வளவோ சாதிக்கலாம்!" என்று தன்னம்பிக்கை தெம்பூட்டுகிறார் பாலசுப்பிரமணியன்.

எலக்ட்ரிக் பொருள்கள்

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள ஏமூரைச் சேர்ந்த இவர், பிறவியிலேயே 100 சதவிகிதம் பார்வையில்லாதவர். இவரின் தாயும் தந்தையும் நெருங்கிய உறவினர்கள் என்பதால், பாலசுப்பிரமணியனுக்கும் இவரின் அண்ணனுக்கும் பிறவியிலேயே 100 சதவிகிதம் பார்வையில்லை. ஆனால், விடா முயற்சி, ஆர்வம், சாதிக்க வேண்டும் என்கிற வெறி இவை அனைத்துமே, இவரை எலெக்ட்ரிக் பொருள் பழுதுபார்க்கும் சிறந்த மெக்கானிக்காக மாற்றியிருக்கின்றன. அத்துடன், `` `உறவு விட்டுப்போயிரக் கூடாது; சொத்து பிறத்தியாருக்குப் போயிடக் கூடாது'னு நெருங்கிய சொந்தத்துல கல்யாணம் பண்ணிக்காதீங்க. மீறி பண்ணினா, உங்களுக்கும் எங்களை மாதிரிதான் குழந்தைங்க பிறக்கும்" என்று மருத்துவ விழிப்புஉணர்வையும் செய்து, அந்தப் பகுதியில் நெருக்கமான உறவுக்குள் நடக்கும் திருமணங்களைத் தடுத்திருக்கிறார்.

வாடிக்கையாளர் கொடுத்த பழைய மிக்ஸி ஒன்றைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்த பாலசுப்பிரமணியனைச் சந்தித்தோம். தட்டுத்தடுமாறி ரிப்பேர் செய்ய பயன்படும் ஒவ்வொரு பொருளையும் அவர் எடுத்தாலும், சிறிது நேரத்தில் அந்த மிக்ஸியில் என்ன பிரச்னை என்பதைக் கண்டுபிடித்துவிடுகிறார். அரை மணி நேரத்தில் அந்தப் பிரச்னையை சரிசெய்ய, மிக்ஸி இயங்க ஆரம்பித்தது. ``எப்படிங்க இப்படி?!" என்ற ஆச்சர்யத்தோடு அவரிடம் பேசினோம்.

எலக்ட்ரிக் பொருள்கள்

``எல்லாம் ஆர்வம்தான் சார். எங்க அம்மா விஜயாவும் அப்பா முத்துசாமியும் நெருங்கிய சொந்தம். ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டதாலதான் எனக்கும் என் அண்ணன் நல்லுசாமிக்கும் பிறவியிலேயே பார்வையில்லை. அப்பாவும் அம்மாவும் கூலி வேலைக்குப் போய்தான் எங்களை வளர்த்தாங்க. பல நாளா சாப்பாட்டுக்கே வழியில்லாம பட்டினியா கிடப்போம். ஆனா, சின்ன வயசுலயிருந்தே நல்லா படிச்சேன். அதோடு, இந்த மாதிரி அறிவியல் விஷயங்கள்ல கொஞ்சம் ஆர்வம். அண்ணன் ரொம்பப் படிக்கலை.

அதனால, வீட்லயே சின்னதா ஒரு பெட்டிக்கடை வெச்சார். சொல்லிக்கிறா மாதிரி வருமானம் இல்லை. கஞ்சிக்கு வழி இல்லைன்னாலும், மூணு பேரும் சேர்ந்து என்னை நல்லா படிக்கவெச்சாங்க. பத்து வருஷத்துக்கு முன்னாடி அப்பா திடீர்னு தவறிட்டார். நொடிஞ்சுபோன குடும்பத்தை அம்மாதான் மாடா உழைச்சு சமாளிச்சுது. என் ஆர்வத்துல சென்னையில எலெக்ட்ரானிக்ஸ் கோர்ஸ் படிச்சேன். அதை முடிச்சதும் என்ன பண்றதுன்னு தெரியலை. அப்போதான், எனக்குத் தெரிஞ்ச எலெக்ட்ரிக் பொருள்களை ரிப்பேர் பண்ணலாம்னு தோணுச்சு. 2011-ல ஆரம்பிச்சேன். யாருமே எனக்கு வேலை தரலை.

எலக்ட்ரிக் பொருள்கள்

`என்னடா இது?'னு உள்ளுக்குள்ளேயே நொறுங்கினேன். ஆனா, விடாமுயற்சியை மட்டும் கைவிடலை. கடைகடையா, வீடுவீடா ஏறி இறங்கினேன். `பொருள்களை இலவசமா ரிப்பேர் செஞ்சுத் தர்றேன்'னு சொன்னேன். ஒண்ணு ரெண்டு வேலை கிடைச்சது. சீக்கிரமாவும் தெளிவாவும் வேலை பார்த்ததுல, மக்களுக்கு என்மேல நம்பிக்கை வர ஆரம்பிச்சது. அந்த நம்பிக்கையே நாள்பட நாள்பட விளம்பரமாகி, சுத்துப்பட்டு மக்களே என்னைத் தேடி வர ஆரம்பிச்சாங்க. 2014-ல இருந்துதான் `இதையே தொழிலா வெச்சுக்கலாம்'னு நம்பிக்கை வந்தது. எனக்கு இதுல ஓரளவுக்கு அடிப்படை தெரியும்கிறதால, அதை வெச்சு எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள்ல என்ன பிரச்னைங்கிறதையும் கண்டுபிடிச்சு சரிபண்ணிடுவேன். அதாவது, ரிப்பேர் செய்யும்போது கேட்கும் ஒலியைவெச்சே பிரச்னையைப் புரிஞ்சுப்பேன்.

அயர்ன்பாக்ஸ், டி.வி., கிரைண்டர், ஆம்பிளிபயர், ஹோம் தியேட்டர், இன்டக்‌ஷன் ஸ்டவ்னு சகலத்தையும் பிரிச்சு மேஞ்சுடுவேன். கண்கள் நல்லா தெரியுற ஆள்கள் கைவிடுற பொருளைக்கூட நான் ரிப்பேர் பார்த்திருக்கிறேன். அதனால, சுத்துப்பட்டு பகுதியான நடுப்பாளையம், சீத்தப்பட்டி, ஏமூர் புதூர், குன்னனூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் எல்லாரும் எலெக்ரானிக்ஸ் பொருள்கள் ரிப்பேர்னா இப்போ என்கிட்டதான் கொண்டுவர்றாங்க. ஏதோ, மாசம் 4000, 5000 ரூபாய் வருமானம் வருது.

எலக்ட்ரிக் பொருள்கள்

ஆரம்பத்துல, `கண் தெரியாதவங்க வாத்தியார் வேலைக்குத்தான் படிப்பாங்க. அதைப் படிக்காம இதை ஏன் படிக்கிற?'னு கேட்டாங்க. `எனக்குப் பிடிச்ச கோர்ஸ் இது'னு படிச்சேன். ஓரளவு வருமானம் தருது. `இதை வெச்சு வாழ்க்கையை ஓட்டிடலாம்'கிற தைரியமும் தன்னம்பிக்கையும் இப்போ வந்திருக்கு. அதுதான் முக்கியம்.

எதையாவது புதிய கண்டுபிடிப்பைக் கண்டுபிடிக்கணும்கிற முயற்சி ஒரு பக்கம் ஓடிட்டிருக்கு. அப்புறம், அரசாங்க அலுவலகங்கள்ல உள்ள எலெக்ட்ரிக் சாமான்கள் பழுதானா, அதை சரிபண்ணும் வாய்ப்பை கரூர் மாவட்ட கலெக்டர் எனக்குக் கொடுத்தா எனக்கு ரொம்ப உதவியா இருக்கும். கரூர் நகரத்துல கடை வெச்சா, தொழில் இன்னும் விரிவடையும். கடைக்கு ஆடியோ மல்டிமீட்டர் தேவை. அதோட விலை 25,000 ரூபாய். ஆனா, அதை வாங்கத்தான் எனக்கு வழி இல்லை. இதையெல்லாம் கடந்து பெரிய கண்டுபிடிப்பை நிச்சயம் கண்டுபிடிப்பேன். ரெண்டு கண்கள் தெரியாத நானே முடங்கலை. ரெண்டு கண்லயும் பார்வை இருக்கும் சில மனுஷங்க வாழ வழி தெரியாம தற்கொலை செஞ்சுக்கிறாங்க. அதை நினைச்சாதான் வேதனையாயிருக்கு. நமக்கு என்ன தெரியும்கிறதை நாம கண்டுபிடிச்சுட்டா, வாழ்க்கையில வலியே இருக்காது'' என அகப்பார்வையால் ஆச்சர்யப்படவைத்தார் பாலசுப்பிரமணியன்.


டிரெண்டிங் @ விகடன்