`சசிகலா உத்தரவுக்கு தலை வணங்கிய திவாகரன்..!' உறவுக்கு வேட்டு வைத்த அந்த வார்த்தை | Clashes between sasikala and divakaran

வெளியிடப்பட்ட நேரம்: 09:57 (15/05/2018)

கடைசி தொடர்பு:10:17 (15/05/2018)

`சசிகலா உத்தரவுக்கு தலை வணங்கிய திவாகரன்..!' உறவுக்கு வேட்டு வைத்த அந்த வார்த்தை

சசிகலா, திவாகரன்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலாவும் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் அறிவிக்கப்பட்டபோது சசிகலா குடும்பம் மொத்தமும் அதை ஏற்றுக்கொண்டது. ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.தி.மு.க-வை சசிகலா சுவீகரித்ததை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். சசிகலாவால் முதல்வர் என்று அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி திடீர் விரோதியாகி ஓ.பன்னீர்செல்வம் முகாமுக்கு மாறிய பிறகுதான் சசிகலா குடும்பத்தில் மோதல்கள் உருவானது. ''ஆட்சி அதிகாரத்தில் இனி கோலோச்ச முடியாது; டி.டி.வி.தினகரன், ரத்த சொந்தங்களுக்கு அரசியல் முக்கியத்துவம் தருவது இல்லை'' என்று அரசல் புரசலாக சசிகலா குடும்பத்தில் புகைய ஆரம்பித்தது. குறிப்பாக, திவாகரன் மகன் ஜெய் ஆனந்துக்கு டி.டி.வி.தினகரன், 'கட்சி பொறுப்பு' எதையும் வழங்கவில்லை என்று திவாகரன் ஆதரவாளர்கள் குறைபட்டுக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில், புதியதாக ஆரம்பிக்கப்பட்ட, 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற அமைப்பிலும் ஜெய் ஆனந்த் உள்பட சசிகலா குடும்பத்தினர் யாரையும் டி.டி.வி தினகரன் சேர்த்துக்கொள்ளவில்லை. இதனால், ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற திவாகரனை மோப்பம் பிடித்த ஆளும்கட்சியைச் சேர்ந்த ஒரு டீம், அவரை மன்னார்குடி குடும்பத்துக்குள் குஸ்தி அடிக்க கொம்பு சீவிவிட்டது. இதையடுத்து, என்ன செய்யலாம் என்று சுந்தரக்கோட்டையில் திடீர் ஆலோசனைக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்தார் திவாகரன். தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களில் இருந்து வி.ஐ.பி-க்கள் சிலர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது, டி.டி.வி.தினகரன், தன் குடும்பத்தை தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும் அதற்கு சசிகலா உடந்தையாக இருப்பதாகவும் வருத்தப்பட்டுள்ளார். மேலும், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு தான் ஆதரவாக இருப்பதால் பல நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும் கொந்தளித்திருக்கிறார். அப்போது, சசிகலா குறித்து திவாகரன் பேசியதை ரகசியமாக டேப் செய்துவிட்டார்களாம். அதில், இரண்டு வார்த்தைகள் சசிகலாவை கடுமையாகச் சாடும் சொற்கள் என்று சொல்கிறார்கள். 

சசிகலா

திவாகரன் நடத்திய ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், தனது முகநூல் பக்கத்தில் எழுத, அதற்கு ஜெய் ஆனந்த் பதில் சொல்ல... குடும்பப் பிரச்னை பூதாகரமாக வெடித்தது. 24.4.18 அன்று பத்திரிகையாளர்களை சந்தித்த திவாகரன், ''அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கியதில் உடன்பாடு இல்லை; இந்த அமைப்பு தொடங்கியது சசிகலாவுக்குத் தெரியாது; இருட்டறையில் இருக்கிறார் டி.டி.வி.தினகரன்; அரசியல் அனுபவம் அவருக்கு இல்லை; டி.டி.வி.தினகரன் செயல்பாடுகளில் சசிகலாவுக்கு உடன்பாடு இல்லை; கட்சியில் தற்போது நடப்பது எதுவுமே ஜெயிலில் இருக்கும் சசிகலாவுக்குத் தெரியாது'' என்று பேட்டி கொடுக்க தமிழக அரசியலில் பரபரப்பு கூடியது.  இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ''தற்போது திவாகரன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் உளறுகிறார். அதை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம்'' என்று டி.டி.வி தினகரன் பேட்டி அளித்தார். இதையடுத்து, கடந்த மாதம் 29-ம் தேதி மன்னார்குடியில் திவாகரன், 'அம்மா அணி' என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று தன்னையே அறிவித்துக்கொண்டார் திவாகரன். கட்சிக்கு தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமிக்கப்போவதாகவும் அறிவித்தார். தொண்டர் தரிசனம் என்று தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் போவதாகவும் அறிவித்தார். சசிகலா ஆதரவு தனக்கு இருப்பதாகவும் கூறினார்.

இதனால் பதறிப்போன டி.டி.வி.தினகரன், உடனடியாக  தஞ்சை, திருவாரூர் பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். திவாகரன் ஆதரவாளர்கள் என்று சொல்லப்பட்டவர்களை நேரில் அழைத்துப் பேசினார். அவர்களை அருகில் வைத்துக்கொண்டே பேட்டி கொடுத்தார். ``திவாகரன் பக்கம் யாருமே இல்லை'' என்று அறிவித்தார். இதையடுத்து, பெங்களூரு சென்று சசிகலாவைப் பார்க்கவும் திட்டமிட்டார் டி.டி.வி.தினகரன். குடும்பத்தில் நடக்கும் குளறுபடிகள் குறிப்பாக திவாகரனின் நடவடிக்கைகள் அதன் பின்புலம் ஆகியவை சசிகலாவுக்கு விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும், சுந்தரக்கோட்டையில் நடந்த ஆலோசனையில், சசிகலா குறித்து திவாகரன் பேசிய டேப் ஆதாரத்தையும் காட்டினார்கள். அதன்பிறகுதான், தனது வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் மூலம் நோட்டீஸ் அனுப்பினார் சசிகலா. அதில், 'சசிகலா பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தக்கூடாது; அக்கா, சகோதரி என்று உரிமை கொண்டாடி பேசிவருவதை உடனே நிறுத்த வேண்டும்'' என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

தினகரன்

அந்த நோட்டீஸை முழுமையாகத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்த திவாகரன் மன்னார்குடியில் அம்மா அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு நேற்று (14.5.18) பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, ''மன்னார்குடி மாபியா என்ற அவப்பெயர் எனக்கு இனி இல்லை. இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன். சசிகலா குடும்பத்திலிருந்து விடுபட்டதை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன். சசிகலா இனி என் சகோதரி அல்ல. அவரை இனி முன்னாள் சகோதரி என்று அழைப்பேன்'' என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.  அரசியல் ஆசையில் வலம் வந்த திவாகரன் குடும்பத்தை முற்றிலுமாக கைகழுவி விட்டுவிட்டார்  டி.டி.வி.தினகரன். இப்போது, சசிகலா குடும்பத்தில் பெரிய அளவில் பொருளாதார பலத்தோடு வலம் வருபவர்கள் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா மற்றும் விவேக். சசி கட்டுப்பாட்டில் இருந்த சொத்துகளான ஜெயா டி.வி நிர்வாகம், கோடநாடு எஸ்டேட், மிடாஸ் மதுபான ஆலை உள்ளிட்டவை இவர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. இளவரசி குடும்பத்தில் கிருஷ்ணப்பிரியாவுக்கு அரசியல் ஆசை உண்டு என்பார்கள். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தன்னுடைய 'கிருஷ்ணப்பிரியா ஃபவுண்டேஷன்' மூலம் ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்தினார் கிருஷ்ணப்பிரியா. அவர்களின் அரசியல் ஆசையை குழிதோண்டி புதைக்கும் வகையில் திவாகரன் விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுத்துள்ளார் டி.டி.வி.தினகரன்!

சசிகலாவும் தினகரனுக்குப் பக்கபலமாக இருப்பது, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கு கை கொடுக்குமா..?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close