வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (15/05/2018)

கடைசி தொடர்பு:10:20 (15/05/2018)

`காவிரி ஆற்றில் புதிதாகக் கிணறு அமைத்து குடிநீர் வழங்கப்படும்!’ - உறுதியளித்த அமைச்சர்

         
 

"கரூர் ஊராட்சி ஒன்றியம், மண்மங்கலம், கடம்பங்குறிச்சி, ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சிகளுக்கு காவிரி ஆற்றில் புதிதாக கிணறு அமைத்து சீரான குடிநீர் வழங்கப்படும்" என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் ஊராட்சி ஒன்றியம், புன்செய் கடம்பங்குறிச்சி பகுதியில் காவிரி ஆற்றின் மையப் பகுதியில் கிணறு அமைத்து, சீரான குடிநீர் வழங்குவதற்காக கிணறு அமையவுள்ள பகுதியை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.

 இதுகுறித்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:

"கரூர் ஊராட்சி ஒன்றியம், புன்சை கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் மற்றும் ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சிகளுக்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட கிணறு மேடான பகுதியில் அமைந்துள்ளதால், கோடைக் காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதைச் சரிசெய்ய, கடம்பங்குறிச்சி பகுதியில் காவிரி ஆற்றின் மையப்பகுதியில் பெரிய அளவில் கிணறு அமைத்து, போதிய அளவு சீரான குடிநீர் வழங்க ஆய்வு நடைபெற்றுவருகிறது. இப்பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும் கரூர் நகராட்சிக்காக கட்டளைப் பகுதியில் அமைந்துள்ள கிணற்றின் நீரில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளதால், தண்ணீர் லேசான மஞ்சள் நிறமாக உள்ளது. இதைச் சரிசெய்ய தொழில்நுட்பக்குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அதன்படி, தண்ணீரில் சில சிகிச்சை முறைகள் மேற்கொண்டு, பின்னர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது" என்றார். முன்னதாக, ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மகாத்மா காந்தி நகர் ஆதி அபார்ட்மென்ட் சாலையை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்ந்த் திட்டத்தின் கீழ் ரூ.11.50 லட்சம் மதிப்பில் தார்ச் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் தொடங்கிவைத்தார்.