வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (15/05/2018)

கடைசி தொடர்பு:13:28 (15/05/2018)

திருமணத்துக்கு முன் ஆண் குழந்தை - சென்னையில் காதலனால் ஏமாற்றப்பட்ட இளம்பெண்

 காதல்

சென்னையைச் சேர்ந்த இளம்பெண்ணை, திருமணம் செய்துகொள்வதாக வாலிபர் ஏமாற்றிவிட்டார். தற்போது அந்தப் பெண்ணுக்கு, அரசு மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

வடசென்னையைச் சேர்ந்தவர் சரண்யா (பெயர் மாற்றம்). இவரின் தந்தை இறந்துவிட்டார். அம்மாவுடன் வசித்துவந்தார். இந்த நிலையில், சரண்யாவுக்கும் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த அரவிந்தனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. இருவரும் நெருங்கிப் பழகினர். அதில் சரண்யா கர்ப்பமடைந்தார். ஆனால், வீட்டில் அதை மறைத்துவிட்டார். மாதங்கள் கடந்ததும் சரண்யாவின் குட்டு வெளிப்பட்டுவிட்டது.  தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அரவிந்தனிடம் சரண்யா வற்புறுத்தினார். ஆனால், அதற்கு அவர் மறுத்ததோடு, தலைமறைவாகியும் விட்டார். இதனால், வடசென்னையிலிருந்து கண்ணகி நகருக்குக் குடிபெயர்ந்தனர்.  உறவினர்கள் வீட்டில் வசித்தனர்.


 இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சரண்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. திருவல்லிக்கேணியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, சரண்யாவின் அம்மா, கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் அரவிந்தன் மீது புகார் கொடுத்தார். அதில், தன்னுடைய மகளை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக, கண்ணகி நகர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி அரவிந்தனைத் தேடிவருகிறார். 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "சரண்யாவின் பெரியம்மா வீடு கொருக்குப்பேட்டையில் உள்ளது. அங்கு அடிக்கடி சென்றபோது அரவிந்தனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், அவர் கர்ப்பமடைந்துள்ளார். அதை அரவிந்தனிடம் தெரிவித்தபோது, சரண்யாவை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அரவிந்தனுக்கு வீடு, வாசல் எதுவும் இல்லை. பிளாட்பாரத்தில் தங்கி, கிடைத்த வேலைகளைச் செய்துவருகிறார். மேலும், அரவிந்தனின் புகைப்படம்கூட சரண்யாவிடம் இல்லை. இதனால், அரவிந்தனைக் கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளன. இருப்பினும், அவருக்குத் தெரிந்தவர்கள் மூலம் அவரைத் தேடிவருகிறோம்" என்றனர். 

பெண்களுக்கு எவ்வளவோ விழிப்பு உணர்வு ஏற்படுத்தினாலும், சரண்யா போல பல பெண்கள், தங்களின் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிற்பது வேதனைக்குரியது.