வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (15/05/2018)

கடைசி தொடர்பு:12:45 (15/05/2018)

வேளாங்கண்ணி சென்ற சுற்றுலா வேன் மீது மணல் லாரி மோதி கோர விபத்து! - 4 பேர் பலி

 ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில்  இன்று காலை வேளாங்கண்ணிசென்ற வேன் மீது ராமநாதபுரம் நோக்கி வந்த மணல் லாரி மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த 16 பேர் ராமநாதபுரம் மருத்துவமனையில் அனுமதி.

ராமநாதபுரம் அருகே, கிழக்கு கடற்கரைச் சாலையில், இன்று காலை வேளாங்கண்ணி சென்ற வேன்மீது ராமநாதபுரம் நோக்கி வந்த மணல் லாரி மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த 16 பேர், ராமநாதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ராமநாதபுரம் அருகே வேன் மீது மணல் லாரி மோதிய விபத்து
 

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், சுற்றுலா வேன் ஒன்றில் வேளாங்கண்ணிக்குச் சென்றனர்.  வேன், இன்று அதிகாலை கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அருகே உள்ள நாகனேந்தல் என்னும் இடத்தில், ராமநாதபுரம் நோக்கி வந்த மணல் லாரி, சுற்றுலா வேன்மீது மோதியது. இதில், வேன் ஓட்டுநர் ஜான் (40), வேனில் பயணித்த புனிதா (32), புஷ்பராஜ் (36), ரிப்பான் (12) உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் அருகே வேன் மீது மணல் லாரி மோதியது. 

 தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, போலீஸாருடன் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார். இதையடுத்து, விபத்தில் சிக்கி காயம் அடைந்த  ரிச்சர்டு, லிசி, ரிஸ்வான், ஹெலன், ஜெனிபர் உள்ளிட்ட 16 பேர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துகுறித்து திருப்பாலைக்குடி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

கடந்த 3 நாள்களாக, தென் மாவட்டங்களில் அதிகமான விபத்துகள் ஏற்பட்டு 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது பெரும்  வேதனையை ஏற்படுத்தியுள்ளது.