வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (15/05/2018)

கடைசி தொடர்பு:12:42 (15/05/2018)

கர்நாடகத் தேர்தல் திக்...திக்... நிமிடங்கள் - உற்சாகத்தில் பா.ஜ.க  தொண்டர்கள்

பாஜக   தொண்டர்கள்

கர்நாடகத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிமுகத்தோடு உள்ளது. இதனால், பா.ஜ.க தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

பாஜக 

கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கு 12-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், பா.ஜ.க-வைவிட காங்கிரஸுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டபோதும், காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்தது. இதனால், காங்கிரஸ் தொண்டர்கள் சந்தோஷத்தில் திளைத்தனர். ஆனால், அடுத்த நிமிடங்களிலேயே காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி, பா.ஜ.க., முன்னிலை வகிக்கத் தொடங்கியது. இதனால், பா.ஜ.க-வினர் உற்சாகம் அடைந்தனர். ஒரு கட்டத்தில், பா.ஜ.க 75 தொகுதிகளிலும் காங்கிரஸ் 75 தொகுதிகளிலும் என சமபலத்துடன் முன்னிலையில் இருந்தன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 தொகுதிகளில் முன்னிலையில் இருந்துவருகிறது. 
 

பாஜக 

224 தொகுதிகளில், 222 தொகுதிகளுக்கு மட்டுமே வாக்குப்பதிவு நடந்தது. 112 தொகுதிகளில் வெற்றிபெற்றால் ஆட்சி அமைக்கலாம். ஆட்சி அமைக்கும் பெருபான்மையைத் தாண்டி, பா.ஜ.க, 119 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால், கர்நாடகாவில் தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சி அமைக்க உள்ளது.  பா.ஜ.க-வினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் வெற்றியைக் கொண்டாடிவருகின்றனர். 

பாஜக

 தேர்தல் முடிவுகள் பா.ஜ.க-வுக்குச் சாதகமாக வந்ததன் பின்னணியில், சில காரணங்கள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் சொல்கின்றனர். அதாவது, சாதியை அடிப்படையாக வைத்தே பா.ஜ.க, காங்கிரஸ், ம.ஜ.த ஆகிய மூன்று கட்சிகளும் தேர்தலை சந்தித்தன. சமீபத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரியான கணக்கெடுப்பில், 6 கோடிக்கு மேல் வாழும் கர்நாடகாவில் 19.5 சதவிகிதத்தினர் பட்டியலின மக்கள், 16 சதவிகிதம் இஸ்லாமியர்கள், 14 சதவிகிதத்தினர் லிங்காயத், 11 சதவிகிதம் ஒக்கலிகர், குருபர் 8 சதவிகிதம், 5 சதவிகிதம் பழங்குடியினர் இருப்பது தெரியவந்தது. அதன்அடிப்படையிலேயே வேட்பாளர்களை நிறுத்திய பா.ஜ.க, இந்தத் தேர்தலில் வெற்றி வாகையைச் சூடியுள்ளது.