`இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கல' - சென்னையில் துணை நடிகைக்கு நள்ளிரவில் நேர்ந்த கொடூரம் 

துணை நடிகை

சென்னையில், சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, துணை நடிகையிடம் மூன்று பேர் அத்துமீறி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 சென்னை குன்றத்தூர் காவல் நிலையத்துக்கு வழக்கறிஞருடன் இளம் பெண் ஒருவர் வந்தார். போலீஸ் நிலையத்தில் கண்ணீர் மல்க  அவர் புகார் கொடுத்தார். அதில், சினிமாவில் நடிக்கவைப்பதாக என்னிடம் கூறியவர்கள், இரவில் காரில் என்னை அழைத்துச்சென்றனர். குன்றத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் சென்றபோது, அவர்கள் என்னிடம் அநாகரிகமாக நடந்துகொண்டனர். மேலும், என்னிடமிருந்த 30 ஆயிரம் ரூபாய், இரண்டு தங்க மோதிரங்கள், செல்போன் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு, நடுரோட்டில் இறக்கி விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர் என்று குறிப்பிட்டிருந்தார். 

 இதையடுத்து, உதவி கமிஷனர் கண்ணன், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் விசாரித்தார். அப்போது அந்தப் பெண், ''சில படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். அதோடு, குரூப் டான்ஸராகவும் இருந்துவருகிறேன். இந்தச் சமயத்தில்தான் எனக்கு பிரபலமான இயக்குநர் ஒருவரை அறிமுகப்படுத்திவைப்பதாக, தெரிந்த நபர் ஒருவர் போன் செய்தார். அதை நம்பி, அவருடன் காரில் சென்றேன். எங்கள் காரைப் பின்தொடர்ந்து  இரண்டு பேர் பைக்கில் வந்தனர். பிறகு, குன்றத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் காரை நிறுத்திவிட்டு, நானும் அவரும் உள்ளே சென்றோம். அப்போது, பைக்கில் வந்தவர்கள் அதிரடியாக காருக்குள் நுழைந்தனர்.

மூன்று பேரும் கத்திமுனையில் என்னிடம் அத்துமீறி நடந்தனர். சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பித்தான் சென்றேன். ஆனால், இப்படி நடக்கும் என்று கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. வீட்டுக்குள் நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினர்'' என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த மூன்று பேர் யார்யார் என்று போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். மூன்று பேரில் ஒருவரின் செல்போன் நம்பரை போலீஸாரிடம் துணை நடிகை கொடுத்துள்ளார். அதன்அடிப்படையில், அவர்களைத் தேடும் படலம் நடந்துவருகிறது. 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "துணை நடிகை கொடுத்த புகாரில் எங்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளன. அதுதொடர்பாக விசாரணை நடத்திவருகிறோம். மேலும், துணை நடிகையை வாடகை காரில்தான் அழைத்துச்சென்றுள்ளனர். இதனால், சம்பந்தப்பட்ட  கார் டிரைவரிடம் விசாரணை நடத்த முடிவுசெய்துள்ளோம். துணை நடிகையின் சொந்த ஊர் தென்மாவட்டம். வடபழனியில் தங்கியுள்ளார். துணை நடிகையிடம் போனில் பேசியவரின் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவரைப் பிடித்துவிடுவோம்" என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!