வெளியிடப்பட்ட நேரம்: 13:39 (15/05/2018)

கடைசி தொடர்பு:15:45 (09/07/2018)

திதி சூன்ய அமாவாசை! - ராமேஸ்வரத்தில் குவிந்த யாத்ரீகர்கள்

வைகாசி மாதம் திதி சூன்ய அமாவாசை தினமான இன்று ராமேஸ்வரம் கடலில் ஆயிரகணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

வைகாசி மாதம், திதி சூன்ய அமாவாசை தினமான இன்று, ராமேஸ்வரம் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

வைகாசி அமாவாசை தினத்தில் புனித நீராடிய பக்தர்கள்


இந்துக்கள், மறைந்த தங்கள் முன்னோர்களின் நினைவாக, ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை தினங்களில் விரதம் இருந்து, நீர் நிலைகளில் புனித நீராடி சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இதன்மூலம், மறைந்த தங்கள் முன்னோர்கள் தங்கள் குடும்பத்தை வாழ்த்துவதாக நம்பிக்கை கொண்டுள்ளனர்.  இதில், ஒவ்வோர் ஆண்டும் தை, மாசி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினங்கள் சிறப்பு வாய்ந்தவையாகக் கூறப்படுகிறது. இவை தவிர, மற்ற மாதங்களில் வரும் அமாவாசை தினங்களிலும் இதுபோன்ற வழிபாடுகளைச் செய்துவருகின்றனர்.

அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜை 

 சில நேரம், மாத துவக்கத்தின்போதும், மாத இறுதியிலும் என இரு அமாவாசை தினங்கள் வருகின்றன. இவற்றில், முதல் அமாவாசை தினத்தை திதி சூன்யம் என்றும், இரண்டாவதாக வரும் அமாவாசை தினத்தை பூரண அமாவாசை தினம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், பூரண அமாவாசை தினத்தில் செய்யப்படும் வழிபாடுகளே உரிய பலனைத் தரும் எனவும் கூறப்படுகிறது.

 திதி சூன்ய அமாவாசை தினமான இன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரம் வந்திருந்த யாத்ரீகர்கள், அக்னிதீர்த்தக் கடலில் புனித நீராடினர். இதைத் தொடர்ந்து, மறைந்த தங்களின் முன்னோர்கள் நினைவாக சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டனர். பின்னர், ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
 கோடைக் கால விடுமுறை தினத்தில் திதி சூன்ய அமாவாசை தினம் வந்ததால், வழக்கத்துக்கு மாறாக கூடுதலான யாத்ரீகர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு பூஜை செய்துவைக்கும் புரோகிதர்களும் அதிக அளவில் இன்று ராமேஸ்வரத்தில் குழுமியிருந்தனர். இதையொட்டி, கடற்கரை மற்றும் கோயில் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.