மோசமான உணவு பற்றி புகார் சொல்ல வாட்ஸ்அப் எண்!


 

கரூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கோடைக்கால உணவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புஉணர்வு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தொடங்கிவைத்து, பொதுமக்கள் பார்வையிட்டுப் பயன்பெற அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில், உணவக உரிமையாளர்கள் மற்றும் சில்லரை அங்காடி உரிமையாளர்களுக்கு, உணவு பாதுகாப்புக்கான விழிப்பு உணர்வு  துண்டுப் பிரசுரங்களை வழங்கி, அவரவர் உணவு வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் பார்வையில் எளிதில் படும்படி காட்சிப்படுத்த அறிவுறுத்தினார். மேலும், பாதுகாப்பான உணவு மற்றும் பாதுகாப்பற்ற உணவு வகைகள் குறித்து விளக்கப்படுத்துதல் முகாமைப் பார்வையிட்டு, அதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறையினரிடம் விளக்கங்களை கேட்டறிந்தார்.

பின்னர், கோடைக்கால உணவு மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்பு உணர்வு நோட்டீஸ்கள் மற்றும் உணவு புகார் தொடர்பான வாட்ஸ்அப் எண் 94440 42322 குறித்த நோட்டீஸ்களையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

 மாவட்ட ஆட்சித்தலைவர்,  "தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் இடங்களில், கோடைக் கால உணவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விழிப்பு உணர்வு முகாம் மற்றும் பாதுகாப்பான உணவு மற்றும் பாதுகாப்பற்ற உணவுகுறித்து காட்சிப்படுத்துதல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மே-2018 மாத இறுதி வரை நடைபெறும் முகாமை பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு, கோடைக் காலத்தில் பாதுகாப்பான உணவு மற்றும் ஆரோக்கியத்தைக் கடைப்பிடிக்கும் வழிமுறைகளை அறிந்து  பயன்பெறவும்" என்றார்.

மேலும், உணவுப்பொருள்குறித்த பொதுமக்களின் புகார்களை, நியமன அலுவலர் வாட்ஸ்அப் எண் வழியாகத் தெரிவித்தால், 24 மணி நேரத்தில் புகார்குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!