வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (15/05/2018)

கடைசி தொடர்பு:15:00 (15/05/2018)

மீனவ கிராமங்களுக்கிடையே மோதல் : ஒருவர் பலி! - தொடரும் பதற்றம்

கடலூர் அருகே உள்ள இரண்டு மீனவ கிராமங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தியதில் ஒரு மீனவர் பலியானார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடலூர் அருகே உள்ள மீனவ கிராமங்கள் தேவனாம்பட்டினம், சோனங்குப்பம். தற்போது ஏப்ரல் 14 முதல் ஜூன் 14 வரை மீன் பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. சோனகுப்பம் பகுதி மீனவர்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், அரசு தடைவிதித்துள்ள மத்திய வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்துள்ளனர். இது குறித்து அறிந்த தேவனாம்பட்டினம் கிராம மீனவர்கள் கடலுக்குச் சென்று சோனங்குப்பம் கிராம மீனவர்களிடம் மத்திய வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்கக் கூடாது, இப்படி மீன் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் எனக் கூறியுள்ளனர். இதனால் நடுக்கடலில் இருத்தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  

கடலூர்

இதைத் தொடர்ந்து கரைக்கு வந்த தேவனாம்பட்டினம் பகுதி மீனவர்கள் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கடற்கரை ஓரமாகவும் படகிலும் சோனங்குப்பம் கிராமத்தை நோக்கிச் சென்றுள்ளனர். அங்கு சேனாங்குப்பம் கிராம மீனவர்கள் யாரும் இல்லாததால் அங்கிருந்த இரண்டு பேரை அரிவாலால் வெட்டியுள்ளனர்.

இதில் காயமடைந்த சேனாங்குப்பம் கிராம மீனவர்கள் 2 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சோனங்குப்பம் கிராம மீனவர் பஞ்சநாதன் (65) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வந்தது. இது குறித்து தகவலறிந்த கடலூர் மாவட்ட  எஸ்.பி விஜயகுமார் தலைமையில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் தேவனாம்பட்டினம் கிராம மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர். இரண்டு மீனவ கிராமங்களுக்கிடையே நடந்த இந்தத் தகராறு சம்பவம் கடலூர் மீனவ கிராமங்களிடையே பதற்றமும் பரபரப்பும் நிலவி வருவதால் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.