வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (15/05/2018)

கடைசி தொடர்பு:15:00 (15/05/2018)

அழகு நிலையத்துக்குச் சென்ற மாணவிக்கு அதிர்ச்சி - செல்போன் மூலம் சிக்கிய 2 பேர்

தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை செல்போன்மூலம் அடையாளம் காட்டியுள்ளார் கல்லூரி மாணவி. இந்தச் சம்பவம் நாக்பூரில் நடந்துள்ளது.  

செல்போன் குற்றம்

மகாராஷ்டிரா  மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி, நாக்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார்.  கல்லூரிப் படிப்போடு பகுதி நேரமாக அழகுக்கலையும் பயின்றுவருகிறார். கடந்த சனிக்கிழமை அழகு நிலையத்துக்குச் சென்றார். அப்போது,  கல்லூரி மாணவியை இரண்டு பேர் வழிமறித்தனர். அவர்களிடமிருந்து தப்பிக்க மாணவி போராடினார். ஆனால் அவர்கள், மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கிக்கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்குக் கொண்டுசென்றனர். பிறகு, மது குடிக்க மாணவியை கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர்களும் மது குடித்தனர். 

போதையில் மயங்கிய மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து, அவர்களும் போதையில் மயங்கினர். இந்தச் சமயத்தில், போதை தெளிந்த மாணவி, தனக்கு நிகழ்ந்த கொடுமையை நினைத்துக் கதறினார். அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயன்றார். அப்போதுதான் மாணவிக்கு ஒரு யோசனை வந்தது. தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இருவருக்கும் கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க மாணவி திட்டமிட்டார். உடனடியாக, போதையில் மயங்கிக் கிடந்தவர்களின் செல்போன்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பினார். 

பிறகு, அவர் அந்த செல்போன்களுடன் போலீஸ் நிலையத்துக்குச் சென்றார். போலீஸாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்லி கதறிய மாணவி, சம்பந்தப்பட்டவர்களின் செல்போன்களை போலீஸாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, செல்போன் மூலம் அவர்களைக் கண்டறிந்துள்ளனர் போலீஸார். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. மாணவி கொடுத்த செல்போன் ஆதாரத்தால், இரண்டு பேரை பிடித்துள்ளோம். அவர்களின் பெயர்  ஷேக் சலாம், ஸ்ரீராம் ஷிப்ராஸ் என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது'' என்றனர்.