வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (15/05/2018)

கடைசி தொடர்பு:15:25 (15/05/2018)

`ரேஷன் அரிசியில் குப்பை கூளங்களைக் கலந்து தர்றாங்க!’ - கலங்கும் மக்கள்


 

"எங்க பகுதி ரேஷன் கடையில்  தரும் ரேஷன் அரிசியில், குப்பை கூளத்தைக் கலந்து போடுறாங்க. பக்சரிசி மட்டுமே தர்றாங்க" என்று மக்கள் புலம்பித் தவிக்கிறார்கள்.

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது தெற்கு அய்யம்பாளையம். இந்தக் கிராமத்துக்கு உட்பட்ட கிழக்கு அய்யம்பாளையத்தில் இருக்கும் நியாயவிலைக்கடையில், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பச்சரிசி கொடுப்பதாக மக்கள் அல்லாடி வருகிறார்கள். அதோடு, பச்சரிசியை மட்டும் கொடுப்பதோடு, அந்த அரிசியில் குப்பை கூளங்களைக் கலந்து கொடுப்பதாகப் புகார் கூறுகிறார்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள்,  "இந்த நியாயவிலைக்கடை தெற்கு அய்யம்பாளையம்,கிழக்கு அய்யம்பாளையம், காமநாயக்கனூர், தெற்கு களம் ஆகிய நான்கு குக்கிராமங்களுக்குப் பாத்தியப்பட்டது. சுமார் 450 குடும்ப அட்டைதாரர்கள் இருக்கிறார்கள். இந்தப் பகுதி மக்கள் அனைவரும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள். 

இவற்றில், 300 குடும்ப அட்டைதாரர்களுக்கு மேல் இந்த ரேஷன் அரிசியை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். ஆனால், கடந்த மூன்று மாதங்களுக்கும்  மேலாக ரேஷன் அரிசியை சுத்தமில்லாமல் வழங்குகிறார்கள். புழுங்கல் அரிசி போடாமல், வெறுமனே பச்சரிசியை மட்டும் போடுகிறார்கள்.

குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் இந்த பச்சரிசி சாதத்தைக் கொடுக்க முடியவில்லை. வயிற்றுப் பிரச்னை ஏற்படுது. 'நல்ல தரமான ரேஷன் அரிசியை வழங்குங்கள்' என்று நியாயவிலைக்கடை பொறுப்பாளரிடம் பலமுறை புகார் சொன்னோம். அதுக்கு அவர், 'வேணும்னா, என்னோட வயல்ல பொன்னி அரிசியை விளைவிச்சு உங்களுக்கு போடவா?'ன்னு நக்கலாகக் கேட்கிறார். அதோடு, எப்போது கேட்டாலும் மண்ணெண்ணெய், உளுத்தம் பருப்பு, பாமாயில் போன்ற பொருள்கள் 'தீர்ந்து போச்சு' சொல்லி விரட்டி அடிக்கிறாங்க. இதனால், நாங்க ரொம்ப பாதிக்கப்பட்டுள்ளோம். மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனே தலையிட்டு, எங்க பிரச்னையைத் தீர்க்கணும். இல்லைனா, எங்க ரேஷன் கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்துவோம்" என்றார்கள் ஆக்ரோஷமாக.