ஏர்டெல்-டெலிநார் இணைப்புக்குத் தொலைத்தொடர்புத்துறை ஒப்புதல்

டெலிநார் இந்தியா நிறுவனத்தைப் பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைப்பதற்கு மத்திய தொலைத்தொடர்புத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஏர்டெல்

டெலிநார் இந்தியா நிறுவனத்தை பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைப்பதற்கு மத்திய தொலைத்தொடர்புத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஏர்டெல்-டெலிநார் இணைப்புக்கான ஒப்பந்தம் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின்படி, ஆந்திர பிரதேசம், பீகார், மகாராஷ்ட்ரா, குஜராத், உத்தரப்பிரதேசம் (கிழக்கு), உத்தரப்பிரதேசம் (மேற்கு) மற்றும் அஸ்ஸாம் ஆகிய ஏழு வட்டங்களில் டெலிநார் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பார்தி ஏர்டெல் கையகப்படுத்த ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.

இந்த கையகப்படுத்தல் திட்டத்துக்கு இந்திய வர்த்தகப் போட்டி ஆணையம் (சி.சி.ஐ) ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டது. 
மேலும், ஏர்டெல்-டெலிநார் இணைப்பு திட்டத்துக்கு என்.சி.எல்.டி அமர்வு சில நிபந்தனைகளின் பேரில் கடந்த மார்ச் மாதம் அனுமதி வழங்கியது.

இந்தச் சூழலில், இந்த இணைப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை நேற்று ( திங்கள்கிழமை) அனுமதி வழங்கியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த இணைப்பு ஒப்பந்தத்தின் மூலம், டெலிநார் இந்தியா நிறுவனத்தின் சொத்துகள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைத்தும் ஏர்டெல் வசம் வரும். தொலைத்தொடர்புத்துறையில் அதிக வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கும் நடவடிக்கையாக ஏர்டெல் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இந்த இணைப்பு ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும் நிலையில், மேற்கண்ட ஏழு தொலைத்தொடர்பு வட்டங்களில் 1800 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் 43.4 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை கூடுதலாகக் கிடைப்பதோடு அந்தத் தொலைத்தொடர்பு வட்டங்களில் ஏர்டெல் நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பான அளவில் வலுப்பெற வாய்ப்புள்ளது. ஏற்கெனவே ஜியோவின் வருகையால் கடும் போட்டியைப் பார்தி ஏர்டெல் நிறுவனம் எதிர் கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏர்டெல் அதிகளவில் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. தொலைத்தொடர்பு துறையில் கடுமையான போட்டி காரணமாக மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் இந்நிறுவனம் முதன்முறையாக இழப்பை கண்டுள்ளது. மேலும், பங்குச்சந்தையில் இதன் பங்குகளின் விலையும் கடுமையாகச் சரிந்துள்ளது. இந்த டெலிநார் இணைப்பு, ஏர்டெல் நிறுவனம் சந்தையில் மீண்டும் அதன் பங்களிப்பை அதிகரிக்க உதவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!