`திவாகரனை அடுத்து கிருஷ்ணபிரியா!' - தினகரன் ஆட்டத்தின் அடுத்த எபிஸோட் | The warning letter is for krishnapriya too, as per Dinakaran's plan

வெளியிடப்பட்ட நேரம்: 15:44 (15/05/2018)

கடைசி தொடர்பு:15:44 (15/05/2018)

`திவாகரனை அடுத்து கிருஷ்ணபிரியா!' - தினகரன் ஆட்டத்தின் அடுத்த எபிஸோட்

`திவாகரனுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என்பது கிருஷ்ணபிரியாவுக்கும் சேர்த்துத்தான். அரசியல் எண்ணத்தோடு யாரும் முளைவிட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் தினகரன்' என்கின்றனர் மன்னார்குடி வட்டாரத்தில். 

`திவாகரனை அடுத்து கிருஷ்ணபிரியா!' - தினகரன் ஆட்டத்தின் அடுத்த எபிஸோட்

கிருஷ்ணபிரியா

ளவரசி மகள் கிருஷ்ணபிரியாவின் அரசியல் செயல்பாடுகளையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார் டி.டி.வி.தினகரன். `திவாகரனுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என்பது கிருஷ்ணபிரியாவுக்கும் சேர்த்துத்தான். அரசியல் எண்ணத்தோடு யாரும் முளைவிட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் தினகரன்' என்கின்றனர் மன்னார்குடி வட்டாரத்தில். 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக தினகரனைக் கொண்டு வந்தார் சசிகலா. அமைச்சர்களுடன் ஆலோசனை, அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் கூட்டம் என தினகரன் செயல்பட்டுக்கொண்டிருந்த அதேநேரம், கிருஷ்ணபிரியாவின் செயல்பாடுகளும் அரசியலை நோக்கி அமைந்தன. சமூகசேவை, சூழல் ஆர்வம், மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது என ஆர்வம் காட்டி வந்தவர், ஒருகட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுத்தார். அவரது இந்தச் செயல்களை தினகரன் ரசிக்கவில்லை. `நமது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இப்படிச் செயல்பட்டால், வெளியில் வேறு மாதிரியான தோற்றத்தைக் கொடுத்துவிடும்' என சசிகலாவிடம் புகார் வாசித்தார் தினகரன். இருவருக்கும் மறைமுகமாக நடந்து வந்த யுத்தம், ஆர்.கே.நகர் தேர்தல் நேரத்தில் பகிரங்கமாக வெடித்தது. 

ஜெயலலிதா சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தபோது எடுத்த வீடியோ வெளியான விவகாரத்தில், `டி.டி.வி.தினகரனின் அவமானகரமான செயல்' என விமர்சித்தவர், `டி.டி.வியுடன் இருக்கும் வெற்றிவேலின் அவமானகரமான செயல்' என ஃபேஸ்புக் ஸ்டேட்டஸை மாற்றினார். பத்திரிகையாளர் சந்திப்பிலும், `நம்பிக்கையோடு நாங்கள் கொடுத்த வீடியோவை வெளியிட்டுவிட்டனர்' எனவும் கொதித்தார். வீடியோ வெளியான விவகாரத்தில் சசிகலாவும் கடும் கோபத்தில் இருந்தார். ஒருகட்டத்தில் அவரையும் சமாதானப்படுத்திவிட்டார் தினகரன். இந்நிலையில், திவாகரனைக் கட்டம் கட்டிய பிறகு, இளவரசி குடும்பத்தை ஒதுக்கும் வேலையில் தீவிரமாக இருக்கிறார் தினகரன் என்கின்றனர் மன்னார்குடி உறவுகள். 

தினகரன்இதைப் பற்றி நம்மிடம் விரிவாக விவரித்தார் மன்னார்குடி உறவினர் ஒருவர், ``சசிகலா குடும்பத்தில் அதிகார மையங்கள் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் தினகரன். ஆளும்கட்சியோடு திவாகரன் நட்பு பாராட்டியதை அவர் விரும்பவில்லை. தவிர, சசிகலா பிம்பத்தை மற்றவர்கள் பயன்படுத்துவதை அவர் ஏற்கவில்லை. அதன் ஒருபகுதியாகத்தான் சசிகலாவின் அனுமதியோடு நோட்டீஸ் அனுப்ப வைத்தார். திவாகரனும், இனி அவர் எனக்கு முன்னாள் சகோதரி எனப் பேட்டியளித்தார். அரசியல்ரீதியாக, சசிகலா குடும்பத்திலிருந்து திவாகரனைப் பிரித்துவிட்டார் தினகரன். அடுத்ததாக, கிருஷ்ணபிரியாவை நோக்கி காய் நகர்த்தத் தொடங்கியிருக்கிறார். திவாகரனுக்கு அடுத்தபடியாக ஜெயலலிதா பெயரை நேரடியாகச் சுட்டிக் காட்டி பேசி வருபவர் கிருஷ்ணபிரியாதான். 

சசிகலா குடும்பத்தில் உள்ள மற்றவர்களைவிடவும் கிருஷ்ணபிரியாவின் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார் ஜெயலலிதா. அவருக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்தார். இந்தப் படங்களை எல்லாம் முகநூலில் வெளியிட்டார். அவரது அப்பா ஜெயராமனைப் பற்றி, ஜெயலலிதா பேசிய வீடியோ காட்சியையும் வெளியிட்டார். தினகரனை ஒதுக்கியதுபோல, எந்தக் காலத்திலும் கிருஷ்ணபிரியாவை ஜெயலலிதா ஒதுக்கியதில்லை. இதுதான் தினகரனை அசைத்துப் பார்த்திருக்கிறது. இப்போது கொடநாடு எஸ்டேட், மிடாஸ், ஜாஸ் சினிமாஸ், ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் உள்பட அனைத்து நிதி விவகாரங்களையும் இளவரசி குடும்பத்தினர்தாம் கையாண்டு வருகின்றனர். கார்டனைப் பொறுத்தவரையில், நிதி அதிகாரம்தான் மிகப் பெரிய பொறுப்பு. இந்த அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றினால், அனைத்தும் தினகரன் மயமாகிவிடும். இதன்பிறகு, சசிகலாவை ஓரம்கட்டவும் அவர் தயங்க மாட்டார். இதை உணர்ந்துதான், `விவேக் கவனிக்கட்டும்' என உறுதியாகக் கூறிவிட்டார் சசிகலா. திவாகரனைக் கட்டம் கட்டியது என்பது கிருஷ்ணபிரியாவுக்குக் கொடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கை. இதை குடும்பத்தினரும் உணர்ந்துள்ளனர்" என்கின்றனர் இளவரசி குடும்ப வட்டாரத்தில்.

நேற்று கிருஷ்ணபிரியாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் கமென்ட் செய்த ஒருவர், `திருமதி கிருஷ்ணபிரியா, சின்னம்மாவும் நடராஜனும்தான் ஆலமரம். நீங்கள் அதன் கிளைகள்தான்' எனக் கூற, இதற்குப் பதில் அளித்த கிருஷ்ணபிரியா, `நான் வேருக்கு மட்டுமே நன்றிக்கடன்பட்டவள். அதை தங்களைப் போன்றோர் அறிய வாய்ப்பில்லை' எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``வேர் என அவர் குறிப்பிட்டது ஜெயலலிதாவைத்தான். அந்தப் புள்ளியிலேயே அவருடைய அரசியல் பாதையும் அமைந்திருக்கிறது. சசிகலாவை முன்னிறுத்தி அரசியல் செய்கிறார் தினகரன். ஜெயலலிதாவை முன்னிறுத்தி அரசியல் செய்கிறார் கிருஷ்ணபிரியா. இவ்வளவுதான் வித்தியாசம்" என்கின்றனர் இளவரசி உறவுகள். 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close