வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (15/05/2018)

கடைசி தொடர்பு:16:40 (15/05/2018)

மீண்டும் மீண்டும் காட்டப்படும் 20 ரூபாய்..! தினகரனிடம் கொந்தளித்த ஆர்.கே.நகர் மக்கள்

நலத் திட்ட உதவிகள் வழங்குவதற்காக ஆர்.கே.நகர் சென்ற அத்தொகுதி எம்.எல்.ஏ டி.டி.வி.தினகரனிடம் 20 ரூபாய் நோட்டைக் காட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் வெற்றிபெற்றார். ஓட்டுக்கு 20,000 ரூபாய் என்றும் அதற்குச் சான்றாக டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் 20 ரூபாய் நோட்டு வழங்கினர் என்றும் பெரிய அளவில் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக ஊடகங்களில் ஆதாரபூர்வமாகச் செய்திகளும் வெளியாகின. இந்தநிலையில் இன்று  நலத் திட்ட உதவிகள் வழங்குவதற்காக டி.டி.வி.தினகரன், ஆர்.கே.நகரின் நேதாஜி நகர் பகுதிக்குச் சென்றார். அங்கே கூடிய பொதுமக்கள், 20 ரூபாயைக் காட்டி டி.டி.வி.தினகரனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், 20 ரூபாய் நோட்டு இங்கே, 20,000 ரூபாய் எங்கே என்று கோஷங்களை எழுப்பினர். ஆர்.கே.நகர், விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் கலைமணி என்பவர் இறந்துவிட்டார். அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக டி.டி.வி.தினகரன் அங்கே சென்றார்.

அங்கேயும் பொதுமக்கள் 20 ரூபாய் நோட்டைக் காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள், இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரைத் தாக்கினர். தாக்கியவர்களைப் பிடித்து, காசிமேடு காவல்துறையில் பொதுமக்கள் ஒப்படைந்தனர். அவர் மீது சாதாரண சண்டை என்ற வழக்கு மட்டும் பதிவு செய்து, அவர்களை விடுவித்தனர். இரு பகுதிகளிலும் காவல்துறையினர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். இந்தச் சம்பவங்களைப் புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்கள் மீதும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். அதனால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.