வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (15/05/2018)

கடைசி தொடர்பு:19:00 (15/05/2018)

ராக்கெட் ராஜா கைதுக்கு எதிர்ப்பு..! நெல்லையில் பேருந்து தீ வைத்து எரிப்பு

ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நெல்லையில் பேருந்துக்குத் தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை பேராசிரியர் செந்தில்குமார் கொலை வழக்கில் ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சென்னையில் கைது செய்யப்பட்ட அவர், நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் 2 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

ராக்கெட் ராஜா

இந்த நிலையில், நெல்லையை அடுத்த வடக்கு தாழையூத்து கிராமத்துக்கு அரசு டவுண் பஸ் வந்துள்ளது. அந்தப் பேருந்தை வழிமறித்த கும்பல் ஒன்று, பேருந்து மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தது. அத்துடன், ராக்கெட் ராஜாவை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பியது. 

இதனிடையே, ஒரு நாள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் நெல்லை வன்கொடுமைச் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ராக்கெட் ராஜா மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்போடு கோவை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லபட்டார். அவரை மீண்டும் 23-ம் தேதி ஆஜர் படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.