வெளியிடப்பட்ட நேரம்: 18:21 (15/05/2018)

கடைசி தொடர்பு:18:55 (15/05/2018)

தண்ணீர் இலவசம்.. 85 வயது பாட்டியின் 69 வருட சாதனை!

தண்ணியைக் காசுக்கு விக்கிறது பாவம். எத்தனை டம்ளரானாலும் இலவசமாத்தான் கொடுப்பேன். 69 வருஷமா இதை செஞ்சுட்டிருக்கேன்.

தண்ணீர் இலவசம்.. 85 வயது பாட்டியின் 69 வருட சாதனை!

பெரிய பேனர், திரும்பும் திசையெங்கும் கட்-அவுட் எனத் தாங்கள் செய்யும் சமுதாய சேவை மூலமாக விளம்பரம் தேடுபவர்களுக்கு மத்தியில், எந்தச் சத்தமுமின்றி ஒரு நதிபோல போகிறபோக்கில் சேவை செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி, சென்னையில் ஒரு பாட்டி, 69 ஆண்டுகளாகத் தன்னைத் தேடிவருபவர்களுக்கு இலவசமாகத் தண்ணீர் தருகிறார். 

நெரிசலுக்கும் பஞ்சம் இல்லாத சென்னை சிந்தாதரிப்பேட்டையின் ஒரு தெருவில், கண்களுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியான அந்தக் காட்சியைப் பார்க்கமுடிந்தது. 85 வயதின் சுருக்கங்களை உடலில் தாங்கிய அந்தப் பாட்டி, வரிசையில் நின்றிருந்தவர்களுக்கு மண்பானையிலிருந்து தண்ணீரை எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தார். 

``யாரும் பானையில் கை விடாதீங்க. நானே எடுத்து தர்றேன். எல்லாரும் குடிக்கிற தண்ணீ, அப்புறம் அழுக்காயிரும்'' என்று தழுதழுத்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தவரிடம், ``பாட்டி, நாங்கள் பத்திரிகையிலிருந்து வந்திருக்கோம்'' என்றோம். 

தண்ணீர்

``எங்கிருந்து வந்தாலும் தண்ணீ தருவேன். அதனால, இடத்தையெல்லாம் சொல்ல வேணாம்'' என்றபடி, ஒரு டம்ளர் தண்ணீரை நம்மிடம் நீட்டுகிறார். முதுமையால் நடுங்கும் அந்தக் கைகளில் கருணை தளும்புகிறது. பத்திரிகை, பேட்டி என்கிற விஷயத்தைப் புரியவைத்ததும், மெல்லிய புன்னகையுடன் பேசுகிறார் அஞ்சலை பாட்டி.

``தண்ணியைக் காசுக்கு விக்கிறது பாவம். எத்தனை டம்ளரானாலும் இலவசமாத்தான் கொடுப்பேன். 69 வருஷமா இதை செஞ்சுட்டிருக்கேன். ஏப்ரல் வந்திருச்சுன்னா தண்ணீர்ப் பந்தல் போட்டுருவேன். எனக்கு உலகமே இந்தச் சிந்தாதிரிப்பேட்டைதான். இந்த இடத்தைவிட்டு வெளியே போனதில்லை. இங்கே இருக்கிறவங்க என்னை, `அம்மா', `பாட்டி'னு ஏதோ ஓர் உறவு முறையைச் சொல்லி கூப்பிடுவாங்க. இதைவிட பெரிய சந்தோசம் என்ன வேணும்? என்னால் காசு பணம் கொடுத்து மத்தவங்களுக்கு உதவ முடியாது. அதனால, என்ன முடியுதோ அதைப் பண்றேன். காலையில் நாலு மணிக்கெல்லாம் எழுந்து தண்ணீர் பிடிக்கும் பானை, டிரம், தம்ளர்கள் எல்லாத்தையும் சாம்பல் போட்டு சுத்தமா விளக்கிருவேன். 

எங்க வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தூரம் இருக்கிற ஒரு வீட்டுக்குப் போய் அடி பம்பில் தண்ணீர் அடிச்சு, 6 மணிக்கெல்லாம் இந்தத் தண்ணீர்ப் பந்தலில் வந்து உட்கார்ந்துருவேன். சாயந்திரம் 4 மணிவரை தண்ணீர் கொடுத்துட்டிருப்பேன். எத்தனை பேர் வந்தாலும் இல்லைன்னு சொன்னதில்லை. தண்ணீர் தீர்ந்துப்போச்சுன்னா, யாரையாவது இங்கே உட்காரவெச்சுட்டு மதியம் 20 குடம் தண்ணீர் எடுத்துவிட்டு வந்துருவேன். `இந்த வயசான காலத்துல வெயிலில் ஏன் இப்படி கஷ்டப்படறே?'னு என் பொண்ணு நிறைய தடவை சண்டை போட்டிருக்கு. அதையெல்லாம் நான் காதுலயே வாங்கிக்க மாட்டேன். தண்ணீரைத் தூக்கிச் சுமக்கும்போது கை கால் வலியெடுக்கும். ஆனால், தாகத்தோடு வந்து என்கிட்ட தண்ணீயை வாங்கிக் குடிக்கிறவங்க முகத்தில் ஒரு திருப்தியைப் பார்த்ததும், வலியெல்லாம் காணாமல் போயிடும்'' என்கிற அஞ்சலை பாட்டியின் குரலில் தாய்மையைத் தரிசிக்க முடிகிறது.

``ஒவ்வொரு வருஷமும் தண்ணீரை கொடுக்க தேவையான பொருள்களை நான் தண்ணீர் பிடிக்கிற வீட்டின் கெளதம் தம்பி வாங்கிக்கொடுப்பார். இந்த 4 மாசத்துக்கு எனக்குத் தேவையான அன்றாட செலவையும் அவரே பார்த்துப்பார். வயித்துக்குச் சாப்பாடு கிடைச்சுடுது. அப்புறம் என்ன வேண்டிக்கிடைக்கு. நான் உயிரோடு இருக்கிற வரை ஒவ்வொரு வருஷமும் ஏப்ரல் மாசத்திலிருந்து ஜூன் வரைக்கும் இலவசமா தண்ணீர் கொடுத்துட்டுதான் இருப்பேன். இதுதான் எனக்குச் சந்தோசமும்'' என்கிறார் அஞ்சலை பாட்டி. 

அஞ்சலை பாட்டி கூறிய கெளதம் ``எனக்குத் தெரிஞ்சு மூன்று தலைமுறையாக அந்தப் பாட்டி இங்கே தண்ணீர்ப் பந்தல் போடறாங்க. தேவையான தண்ணீரை எங்க வீட்டிலிருந்துதான் எடுத்துப்பாங்க. தண்ணீர்ப் பந்தல் போடும் மாதங்களில், பாட்டிக்குத் தேவையான அடிப்படை செலவை எங்க குடும்பம் பார்த்துக்கிறோம். மிகப்பெரிய சேவை செய்யும் அஞ்சலைப் பாட்டிக்கு நாங்க செய்யும் சின்ன மரியாதை இது. இத்தனை வருஷமா இந்தத் தண்ணீர்ப் பந்தல் மக்களுக்குப் பயன் கொடுத்துட்டிருக்கு. இனியும் கொடுக்கும்'' என்றார்.


டிரெண்டிங் @ விகடன்