கடலில் மூழ்கித் தற்கொலை செய்யும் போராட்டம்..! தடுத்து நிறுத்திய காவல்துறை

Nagapattinam Formers 

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்தும் நாகையில் இன்று விவசாயிகள் கடலில் மூழ்கித் தற்கொலை செய்யும் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.  

விவசாயிகள்

நாகை புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு, அங்கிருந்து கடலுக்குச் சென்று கடலில் மூழ்கித் தற்கொலை செய்துகொள்வது என்று திட்டம் வகுத்திருந்தனர்.  

ஆனால், அரசு தரப்பில் இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முதல் நாளே கடலோரக் காவல் படை எஸ்.பி சின்னசாமி தலைமையில் கடற்கரையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். நாகை எஸ்.பி சேகர் சஞ்சை தேஷ்முக் தலைமையில் போலீஸார் அணிவகுப்பு நடத்தி அச்சுறுத்தினர். இந்நிலையில், இன்று போராட்டத்துக்கு வந்த விவசாயிகளை நகருக்குள் செல்லவிடாமல் தடுத்து, ஆங்காங்கே போலீஸார் தடுத்து நிறுத்திவிட்டனர். என்றாலும், காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கப் பொதுச் செயலாளர் தனபாலன் தலைமையில் புதிய பேருந்து நிலையத்தில் விவசாயிகள் கூடி மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர். அதன்பின், கடற்கரை நோக்கிப் புறப்பட்ட அவர்களைப் போலீஸார் தடுத்து 5 பெண்கள் உட்பட 275 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.  

இதுபற்றி தனபாலனிடம் பேசியபோது, ``விவசாயம் செய்ய தண்ணீர்தான் முக்கியம். அதைத் தர மறுக்கிறார்கள். பயிர்க் காப்பீடு செய்தும் அந்தத் தொகையைத் தரவில்லை. பயிர் கருகியதால் அதைக் கண்டு மனம் தாங்க முடியாமல் பல விவசாயிகள் உயிரிழந்தனர். இவையெல்லாம் நடந்தும் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை உதாசீனப்படுத்துகிறது. இனி உயிரோடு இருந்து என்ன பயன்? செத்துத் தொலையலாம் என்றால் அதையும் செய்யவிடாமல் கைது பண்றாங்க’' என்றார் வேதனையுடன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!