வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (15/05/2018)

கடைசி தொடர்பு:21:40 (15/05/2018)

தமிழகத்துக்குக் காவிரி தண்ணீர் கிடைக்க கல்லணையில் சிறப்பு யாகம் நடத்திய பொன்.ராதாகிருஷ்ணன்..!

காவிரியில் தமிழகத்துக்குத் தட்டுப்பாடின்றி தண்ணீர் வருவதற்கு கல்லணையில் யாகம் நடத்தி சிறப்புப் பூஜைகளைச் செய்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வழிபட்டார். 

பொன்.ராதாகிருஷ்ணன்

இந்த யாகத்தில் அமர்ந்திருக்கும்போது கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்ற ஒரு நல்ல செய்தியும் வந்தது என அவர் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து பா.ஜ.க சார்பில் நடத்தப்படும் உழவனின் உரிமை மீட்பு தொடர் சைக்கிள் பேரணி இன்று தொடங்கியது.

கல்லணையில் தொடங்கும் இந்தப் பேரணி பல பகுதிகளுக்குச் சென்று, வரும் ஜூன் 2-ம் தேதி பேராவூரணியில் நிறைவடைகிறது. இதைத் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால், நாளை (16ம் தேதி) கரிநாள் என்பதால் அமாவாசை தினமான இன்றே யாகபூஜை நடத்துவதற்காக வந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
இந்தப் பேரணி காவிரி விவகாரத்தில் தமிழனின் உரிமையை நிலைநாட்டவும், நதிகளை எல்லாம் இணைத்து உழவனின் உயிர் காக்க வேண்டும். ஆறுகளில் மணல் அள்ளுவதை முறைப்படுத்தி ஏரி, குளம் போன்ற நீர் வழித் தடயங்களைத் தூர்வாரி தடுப்பணை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுயுத்தி நடத்தப்படுகிறது. 

காவிரியில் தண்ணீர் வருவதற்காக யாகம் வளர்த்து சிறப்புப் பூஜைகள் செய்வதற்கும், பேரணியைத் தொடக்கி வைப்பதற்கும் வந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கல்லணையில் ஆற்றுக்குள்ளேயே அமைக்கப்பட்ட யாக சாலையில் குடங்களில் புனித நீர் வைத்து சிவாச்சாரியார்கள் சிறப்பு மந்திரங்கள் ஓதினர். இது காவிரியில் தண்ணீர் வருவதற்காக நடத்தப்படும் சப்தநதி சப்த சாகர ஆதர்சன யாகபூஜை என்று அவர்கள் கூறினார்கள். இந்த யாக பூஜை நடத்துவதன் மூலம் 7 நதிகளான கங்கை, யமுனா, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய நதிகளில் தண்ணீர் வரும் என்பது நம்பிக்கை. இதன் மூலம் தமிழகத்திற்கு அதிவிரைவாகக் காவிரியில் தண்ணீர் வந்து விவசாயிகள் விவசாயம் செய்து பயிர்கள் செழித்து பாரதத்தில் வசிக்கக்கூடிய அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று வாழ வேண்டும் எனப் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் பிராத்தனை செய்து கொண்டனர்.
பூஜை முடிந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டதும் குடங்களில் இருந்த புனித நீரை கல்லணையில் தேங்கியிருந்த நீரில் ஊற்றி வழிபட்டனர். பின்னர் அங்கு உள்ள ஆஞ்சநேயர், கருப்பண்ணசாமி விநாயகர், மாரியம்மன், காவிரி அம்மன் என அனைத்துக் கோயில்களிலும் வழிபாடு நடத்தியதோடு காவிரி தாய்க்கும் மற்றும் கரிகாலச்சோழன் மணிமண்டபத்தில் உள்ள கரிகாலச்சோழன் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

பிறகு சைக்கிள் பேரணியைத் தொடக்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், `உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் 24 நாள்கள் நடக்கிறது. அந்தப் பேரணி பெரிய வெற்றி பெற வேண்டும். மேலும், தமிழகத்திலும் கர்நாடகாவிலும் நல்ல மழை பெய்து தமிழகத்துக்குக் காவிரி நீர் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க வேண்டும். யாகபூஜையில் அமர்ந்திருந்த போது கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்ற ஒரு நல்ல செய்தி வந்தது. இந்த வெற்றியினால் 5 ஆண்டுகளுக்குக் காவிரியில் எந்தத் தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் வரும். நடிகர் கமல் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்கு எங்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வது பற்றி பா.ஜ.க  தலைமைதான் முடிவு எடுக்கும்' என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க