வெளியிடப்பட்ட நேரம்: 22:17 (15/05/2018)

கடைசி தொடர்பு:22:17 (15/05/2018)

சாலையோரத்தில் கிடந்த மனிதக் கால்.. ! தெருநாய் உண்டாக்கிய பரபரப்பு

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிக்கு உட்பட்ட கே.பி.என் காலனி நொய்யலாற்றங்கரை ஓரத்தில், நேற்றைய தினம் நாய் ஒன்று மனிதனின் துண்டிக்கப்பட்ட இடது காலை வாயில் கவ்வியபடி ஓடிவந்தது. அவ்வழியே சென்ற பாதசாரிகள் அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தபடி சத்தம்போட, வாயில் கவ்விக்கொண்டு வந்த காலை அப்படியே போட்டுவிட்டு நாய் ஓட்டம் பிடித்தது.

மனிதக் கால்

பாதி எரிந்த நிலையில் கிடந்த அந்தக் காலில், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் கத்தரிக்கோல் மற்றும் காயத்துக்குக் கட்டப்படும் துணியும் போடப்பட்டிருந்ததால், அப்பகுதியினர் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். அதில், துண்டாகிக் கிடந்தது ஆண் ஒருவரின் இடது கால் என்றும், மருத்துவமனை உபகரணங்கள் எல்லாம் இருப்பதால் கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் உறுதிப்படுத்திய அதிகாரிகள், சம்பவம் தொடர்பாக மருத்துவமனை வட்டாரங்களில் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

அதன்படி, தற்போது `திருப்பூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்த ஒரு நபரின் கால்தான் அது" என்பது தெரிய வந்திருக்கிறது. திருப்பூர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவர், அப்பகுதியில் உள்ள தனியார் மில் ஒன்றில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்னர், பணியின்போது எதிர்பாரா விதமாக சக்தியின் இடது கால் இயந்திரத்துக்குள் சிக்கி துண்டாகி இருக்கிறது. பின்னர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருக்கிறார்கள். சிகிச்சையின்போது, மருத்துவர்கள் துண்டாகியுள்ள இடது காலை முழுமையாக அகற்றியிருக்கிறார்கள்.

அகற்றப்பட்ட அந்தக் காலை சக்தியின் உறவினர்கள் அவர்களது சமூக வழக்கப்படி எரிக்க வேண்டும் என்று கூற, அதனையடுத்து மருத்துவமனை நிர்வாகமும் அவர்களிடம் கையெழுத்துப் பெற்றுக்கொண்டு, அகற்றபட்ட இடது காலை உறவினர்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அதை வாங்கிக்கொண்டு சென்ற உறவினர்கள், திருப்பூர் மின் மயானம் அருகே உள்ள புதர் பகுதியில் வைத்து அதை எரித்திருக்கிறார்கள். ஆனால், அன்றைய தினம் பெய்த மழையால், கால் முழுமையாக எரியாமல் கிடந்திருக்கிறது. இந்நிலையில் நேற்று அந்தப் புதர் பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று அந்தக் காலை கவ்விக்கொண்டு ஓடிவந்து சாலையில் போட்டுவிட்டு சென்றதுதான் இந்தப் பரபரப்புக்குக் காரணம் என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.