பெரும்பான்மைக் கூட்டணி ஆட்சி அமைப்பதுதான் சரி..! வைரலாகும் அருண் ஜெட்லி ட்விட்டர் பதிவு | Arun Jaitley's twitter post goes viral

வெளியிடப்பட்ட நேரம்: 21:22 (15/05/2018)

கடைசி தொடர்பு:21:51 (15/05/2018)

பெரும்பான்மைக் கூட்டணி ஆட்சி அமைப்பதுதான் சரி..! வைரலாகும் அருண் ஜெட்லி ட்விட்டர் பதிவு

தொங்கு சட்டமன்றம் அமைந்தவேளையில் ஒருவேளை தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் கூட்டணி அமைத்தால், பெரும்பான்மை உள்ள கூட்டணியை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பதுதான் சரி என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ட்விட்டரில் பதிவிட்டது தற்போது வைரலாகிவருகிறது. 

அருண் ஜெட்லி

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு இன்று வெளிவந்தது. அதில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும் ஜனதா தளம் 37 தொகுதிகளிலும், இதரக் கட்சிகள் 3 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

இந்தநிலையில், குமாரசாமி தலைமையில் ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்துள்ளது. அதற்கு பா.ஜ.க எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மேலும், ஒரு வாரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கக் கூடிய நிபந்தனையுடன் பா.ஜ.கவின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதியளிப்பார் என்று தெரிகிறது.

இந்தநிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் முந்தயை ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில், 'தொங்கு சட்டமன்றம் அமைந்தவேளையில் ஒருவேளை தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் கூட்டணி அமைத்தால், பெரும்பான்மை உள்ள கூட்டணித் தலைவரை ஆட்சி அமைக்க அனுமதியளித்து, குறைந்த காலத்தில் பெரும்பான்மைய நிரூபிக்க உத்தரவிடுவதுதான் அரசியல்சாசன சட்டப்படி சரி' என்று பதிவிட்டுள்ளார்.