நாகப்பட்டினம் கடற்கரையில் கரை ஒதுங்கிய போதைப்பொருள்கள்..!

நாகை மாவட்டம், சீர்காழி, கீழமூவர்க்கரையில் உள்ள கடற்கரையில் சுமார் 40 கிலோ மதிப்புடைய கஞ்சா போதைப்பொருள் கரை ஒதுங்கியுள்ளது. இவற்றைக் கைப்பற்றிய கடலோரக் காவல்துறையினர் தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.

போதைப்பொருள்

சீர்காழிக்கு அருகே உள்ள கீழமூவர்க்கரை என்ற மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். தற்போது ஆழ்கடலுக்கு விசைப்படகு மூலம் சென்று மீன் பிடிக்க தடைக்காலம் என்பதால் சரவணன் தனது சிறிய பைபர் படகு மூலம் கடலின் 10 கிலோ மீட்டருக்கு உள்ளான தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது கடலில் ஏதோ பொட்டலங்கள் மிதந்து வந்து கரை ஒதுங்குவதைக் கண்டு அவற்றைக் கைப்பற்றினார்.

போதைப்பொருள்

கடலில் கிடைக்கும் மீன் போன்ற உணவுப் பொருள்களை தவிர கிடைக்கும் மற்ற பொருள்களை அவ்வூர் காரியஸ்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற விதி உள்ளதால், அவற்றை சரவணன் ஊர் பெரியவர்களிடம் ஒப்படைத்தார். பின்பு அவர்கள் திருவெண்காடு காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் செய்த ஆய்வில் கரை ஒதுங்கிய பொருள் கஞ்சா எனக் கண்டறியப்பட்டது. தலா 4 கிலோ எடையுள்ள 10 பொட்டலங்கள் கரை ஒதுங்கி உள்ளன. அவற்றின் மொத்த எடை 40 கிலோ.

பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்த கடலோரக் காவல்துறையினர் போதைப்பொருளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் அந்தக் கஞ்சா போதைப்பொருளின் விலை ஏறக்குறைய 2.5 லட்சம் என்றும், இவை கடத்தல் பொருள்களாக இருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டது. இது குறித்து கடலோர போலீஸாரிடம் கேட்ட போது, ``இந்த கஞ்சா பொட்டலங்கள் தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்டிருக்கலாம். இவற்றை கொண்டு சென்ற படகு கவிழ்ந்ததில் இவை கரை ஒதுங்கியிருக்கலாம். இது பற்றி தற்போது விசாரணை செய்து கொண்டு இருக்கிறோம்" என்றனர்.

இதே சமயத்தில் இராமேஸ்வரம் கடற்கரையில் சுமார் 25 கிலோ மதிப்புடைய கஞ்சா கரை ஒதுங்கியுள்ளது. இதிலிருந்து போதைப்பொருள்களின் கடத்தல் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருப்பது தெளிவாகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!