வெளியிடப்பட்ட நேரம்: 23:35 (15/05/2018)

கடைசி தொடர்பு:23:35 (15/05/2018)

`சிக்ஸர் அடித்து வெற்றித்தேடி தந்த தினேஷ் கார்த்திக்' - ராஜஸ்தானை எளிதில் வீழ்த்திய கொல்கத்தா! #KKRvsRR

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

photo credit : @KKRiders

ஐபிஎல் 49வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஓரளவுக்குத் தாக்குப்பிடித்து ஆடினர். ராகுல் திரிபாதி 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த ஜோஸ் பட்லர் இந்தமுறை 39 ரன்களுக்கு அவுட் ஆகினார். இதனையடுத்து வந்த வீரர்கள் கொல்கத்தா பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

எட்டக்கூடிய இலக்கை நோக்கிக் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சுனில் நரேன் - கிறிஸ் லின் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. அதிரடியாக ஆடிய சுனில் நரேன் 7 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். கிறிஸ் லின் 45 ரன்களுக்கு வெளியேறப் பின்னர் இணைந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் - ரஸ்ஸல் இணை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. 18வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து தினேஷ் கார்த்திக் அணியை வெற்றிபெறவைத்தார். தினேஷ் கார்த்திக் 41 ரன்களுடனும், ரஸ்ஸல் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா 14 புள்ளிகளுடன் பிளே ஆப் வாய்ப்புக்கு நெருக்கத்தில் உள்ளது. இன்னும் ஒரு வெற்றிபெற்றால் கொல்கத்தா அணி பிளே ஆப்க்கு தகுதி பெற்றுவிடும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க