Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``சப்பரம் கனவு பலிக்காது” - குஷ்பூவுக்கு திருநாவுக்கரசர் சொன்ன குட்டிக்கதை!

தமிழக காங்கிரஸ் கட்சியில் குஷ்பூவுக்கும் திருநாவுக்கரசருக்கும் மோதல் வலுத்துள்ளது. இதனால் வெளிப்படையாக இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். 

காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலை நகரில் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் எம்.பி விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ``இரண்டு மாதத்தில் என்னைத்  தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிடுவார்கள் என குஷ்பூ சொல்கிறார். அவர் வகித்து வரும் பதவிக்கு என்ன பேச வேண்டுமோ அதைத்தான் பேச வேண்டும். இரண்டு மாதத்தில் இருந்து என்னை நீக்காவிட்டால் அவர் தூக்குமாட்டிக்கொள்வாரா? ராகுல்காந்தியோ அல்லது கட்சி தலைமையில் உள்ள முக்கியப் பிரமுகர்களோதான் இதை அறிவிக்க முடியும். யார் சொல்லி இவர் இப்படிச் சொல்கிறார்? தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி முடிந்தால்தான் ஓ.பி.எஸ், இ.பி.எஎஸ் நிலை என்னவென்று தெரியும். தமிழகத்தில் அ.தி.மு.க பலம் இழந்து வருகிறது. தி.மு.க-வில் உள்ளவர்கள் வேறு கட்சிக்குச் செல்லமாட்டார்கள் என்பதால் தி.மு.க-வின் பலம் அப்படியே இருக்கும். இனி வரும் காலங்களில் தி.மு.க-வுக்கு அடுத்து காங்கிரஸ் கட்சிதான் தமிழகத்தில் பலமான கட்சியாக இருக்கும். பா.ஜ.க தமிழகத்தில் காலுன்ற வாய்ப்பே இல்லை” என்றவர் குஷ்பூவுக்காக ஒரு குட்டி கதை சொன்னார். 

``ஒரு ஊரில் கோயிலில் தேர் ஒன்று இருந்தது. அந்த ஊர்மக்கள் கோயில் சாமியைத்  தேரில் வைத்து ஊர்முழுக்க வைத்துக் கொண்டாடிவந்தார்கள். நம்மையும் சேர்த்துத்தான் மக்கள் வணங்குகிறார்கள் என பெருமைப்பட்டுக்கொண்டது அந்தத் தேர். நாம் மட்டும் ஊரைச் சுற்றிவந்தால் எப்படி இருக்கும் என அந்தத் தேர் ஒரு நாள் நினைக்க ஆரம்பித்தது. இதனால் ஒரு நாள் சப்பரம் (தேர்) மட்டும் ஊருக்குள் தனியாக சென்றது. ஆனால் யாரும் பூஜை செய்யவில்லை. இதனால் கிளம்பிய இடத்திலேயே அந்தச் சப்பரம் வந்து நின்றுவிட்டது. அதுபோல்தான் சிலர் சப்பரமாக இருந்து கொண்டு தங்களை சாமியாக நினைத்துக்கொள்கிறார்கள்” என்றார். தொடர்ந்து பேசிய கட்சியினரும், திரையுலகில் இருந்து வந்த அந்த நடிகைகளை நம்பி நாங்கள் காங்கிரஸ் கட்சியில் இல்லை” என குஷ்பூவுக்கு எதிராகவே பேசினார்கள். ஆக, தமிழக காங்கிரஸ் தலைமைக்கான யுத்தம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement