மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையில் அ.ம.மு.க மனு! | Ammk party are gave petition to thoothukudi vijilence to against pollution control engineer

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (16/05/2018)

கடைசி தொடர்பு:07:24 (16/05/2018)

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையில் அ.ம.மு.க மனு!

தூத்துக்குடியில் இயங்கி வரும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  21 கிராம மக்கள் இந்த ஆலையை நிரந்தரமாக மூடிட வேண்டும் என தொடர் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே நெல்லையைச் சேர்ந்த முத்துராமன் என்பவர், மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமல் ஸ்டெர்லைட்  ஆலை இயங்குவதாகவும்  அதைத் தடை செய்ய வேண்டும் எனவும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அ ம மு க

இந்நிலையில்,  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலர்,  ஹென்றி தாமஸ், சிப்காட் திட்ட அலுவலர், தூத்துக்குடி மாசுக் கட்டுப்பாட்டு பொறியாளர், ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் ஆகியோர் மீது  தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு கமிஷனரிடம்  புகார் மனு அளித்துள்ளார். அதில்,   ``தூத்துக்குடி தெற்கு  வீரபாண்டியாபுரம், மீளவட்டானில் சிப்காட் நிறுவனம்  இயங்கி வருகிறது. சிப்காட் துவங்க, சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதியும், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு மற்றும் முன்னேச்சரிக்கை சட்டத்தின் கீழ் சான்றிதழ் பெற வேண்டும்.

சிப்காட் கட்டடம் 2-க்கு  எந்த அனுமதியும் பெறப்படவில்லை. ஸ்டெர்லைட் ஆலை போன்ற அபாயகர நிறுவனம் துவங்கும்போது, மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் ஆனால், ஸ்டெர்லைட் நிறுவனம்,   சிப்காட் எல்லைக்குள் வருவதால்  கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தத் தேவையில்லை என, தெரிவிக்கப்பட்டது.  உண்மையில், தற்போது  இருக்கும் சிப்காட் வளாகத்தில், ஸ்டெர்லைட் ஆலை வரவில்லை. 

இந்த ஆலை சிப்காட் எல்லைக்குள் இருப்பதாக போலியான ஆவணங்கள் தயார் செய்து அனுமதி வங்கியுள்ளனர். அதேபோல், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு, 324 ஏக்கர் நிலத்தை முறைகேடாக ஒதுக்கீடு செய்து, அரசுக்கு வருமான இழப்பும் ஏற்படுத்தியுள்ளனர். இந்த முறைகேட்டில், சிப்காட் திட்ட அலுவலர்,  மாசுக் கட்டுப்பாட்டு பொறியாளர் ஆகியோர்  தனியார் ஆலைக்குச் சாதகமாக செயல்படும் விதமாக உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளனர்.

இது லஞ்சம் பெற்றதற்கு இணையான குற்றமாகும். எனவே, இவர்கள் மீதும், ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால் ஆகியோர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க