`பள்ளியில் ஆசிரியை மர்ம மரணம்' - கலெக்டர் அலுவலகத்தை ஸ்தம்பிக்க வைத்த உறவினர்கள்! | Teacher died in school by mystery near ariyalur

வெளியிடப்பட்ட நேரம்: 06:06 (16/05/2018)

கடைசி தொடர்பு:07:15 (16/05/2018)

`பள்ளியில் ஆசிரியை மர்ம மரணம்' - கலெக்டர் அலுவலகத்தை ஸ்தம்பிக்க வைத்த உறவினர்கள்!

பள்ளி வளாகத்திலேயே ஆசிரியர் தூக்கு மாட்டி மரணமடைந்த விவகாரத்தில் மர்மம் இருப்பதால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது பாளையப்பாடி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளான சேகர் - சுமதி தம்பதியின் மூத்த மகள் செந்தமிழ்செல்வி. இவர் பி.ஏ, பி.எட் முடித்து உடையார்பாளையம் வட்டம், மணகெதி கிராமத்தில் இயங்கி வரும் கௌதம புத்தர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு முதல் ஆசிரியையாகப் பள்ளியின் விடுதியிலேயே தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். பள்ளி மாணவர்களுக்குத் தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டும் ஆசிரியைகள் சிலரைப் பள்ளியின் மாணவர்கள் சேர்க்கைக்காக வீடு, வீடாகச் சென்று கேன்வாசிங் செய்வதற்காக பள்ளி நிர்வாகம் நியமித்துள்ளது. கேன்வாசிங் பணிக்காக 4 ஆசிரியைகள் உள்ளிட்டோர் நேற்று காலையில் கிளம்புவதற்காக குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது சக ஆசிரியைகள் செந்தமிழ்செல்வியினை குளிக்க அழைத்துள்ளனர். 

நீங்கள் செல்லுங்கள் நான் பிறகு வருகின்றேன் எனக் கூறியுள்ளார். இதையடுத்து குளித்துவிட்டு அறைக்கு வந்த ஆசிரியைகள், செந்தமிழ்செல்வி தூக்கில் தொங்கிய நிலையில் கண்டதும் அதிர்ச்சியடைந்து பள்ளி நிர்வாகிக்கு தகவலளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த பள்ளி நிர்வாகி செந்தமிழ்செல்வியின் பெற்றோருக்கு தகவலளித்துள்ளார். இதையடுத்து இறந்துபோன ஆசிரியையின் உடலைப் பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியையின் சொந்த ஊரான பாளையபாடியில் உள்ள வீட்டில் ஒப்படைத்துள்ளனர். செந்தமிழ்செல்வியின் உடல் உடற்கூறு ஆய்விற்காக அரியலூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

இந்நிலையில், செந்தமிழ்செல்வியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் பள்ளி நிர்வாகியினை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். அதுவரை செந்தமிழ்செல்வியின் உடலை வாங்கமாட்டோம் எனக் கூறி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டம் நடத்தினார்கள். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அரியலூர் தாசில்தார் முத்துலட்சுமி மற்றும் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பள்ளி நிர்வாகத்தின் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்தச் சாலை மறியலால் அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.