வெளியிடப்பட்ட நேரம்: 06:31 (16/05/2018)

கடைசி தொடர்பு:07:09 (16/05/2018)

காட்டிக் கொடுக்கப்பட்ட கஞ்சா வியாபாரி - காவல் நிலையத்தில் ரகளை!

சென்னை கண்ணகி நகர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரிகள் கடும் ரகளையில் ஈடுபட்டனர்.

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் வசந்த் மற்றும் போலீஸார் அந்தப் பகுதியில் அதிரடியாகச் சோதனை நடத்தினர். அப்போது பிரபல கஞ்சா வியாபாரி தமிழரசனை  போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் தமிழரசனின் நண்பர் மாரிமுத்தும் கஞ்சா விற்பது தெரியவந்தது. இதனால் பதுங்கியிருந்த மாரிமுத்துவையும் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து இரண்டரை கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

இவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்தத் தகவல் மாரிமுத்துவின் உறவினர்களுக்குத் தெரிந்ததும் அவர்கள் காவல் நிலையத்துக்கு வந்து தமிழரசனின் குடும்பத்தினரிடம் ரகளையில் ஈடுபட்டனர்.

இரு குடும்பத்தினரையும் போலீஸார் சமரசப்படுத்தினர். அப்போது ஆத்திரமடைந்த பெண் ஒருவர் போலீஸார் மீது மண் வாரித் தூற்றினார். தொடர்ந்து மாரிமுத்துவைக் காட்டிக் கொடுத்தது தமிழரசன்தான் என்றும் தகராறு செய்தனர். இதில் ஒருவரின் மண்டை உடைந்தது. அவர் மாரிமுத்துவின் உறவினர் என்று தகவல் வெளியானது. இந்தச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.