வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (16/05/2018)

கடைசி தொடர்பு:09:16 (16/05/2018)

டெல்லியை அதிகாலையில் புரட்டிப்போட்ட புழுதிப் புயல்!

டெல்லியில் இன்று (16.05.2018) அதிகாலை புழுதிப் புயல் தாக்கியது. 

புழுதிப் புயல்

வட இந்திய மாநிலங்கள் கடந்த சில தினங்களாகவே கடும் புழுதிப் புயல், இடி மின்னலுடன் மழை என கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. மே மாத தொடக்கத்தில் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஏற்பட்ட புழுதிப்புயலால் குறைந்தது 100 பேர் பலியாயினர். 500-க்கும் அதிகமானோர் காயங்களுடன் சிகிச்சை பெற்றனர்.  மேலும் பல மாநிலங்களில் இடி மின்னலுக்குப் பலர் பலியாயினர். 

புயல்

இந்நிலையில், டெல்லி உட்பட 5 மாநிலங்களில் மே 13, 14 தேதிகளில் பல சேதாரங்களை ஏற்படுத்திய புழுதிப்புயல் இன்று அதிகாலை தலைநகர் டெல்லியை மீண்டும் தாக்கியது. காற்றின் வேகத்தில் மரங்கள், மின்சாரக் கம்பங்கள் எல்லாம் சாலையில் விழுந்தது. சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மரங்கள் விழுந்ததால் கடும் சேதாரங்கள் ஏற்பட்டுள்ளது.  பலத்த காற்றைத் தொடர்ந்து அங்கு மழையும் பெய்தது.  இந்தப் புயல் காரணமாக டெல்லியில் திடீரென வெப்பநிலையும் சரிந்தது. இந்நிலையில், இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், மேலும் இரண்டு முதல் மூன்று தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் ஆந்திர மாநிலம் உட்படப் பல இடங்களில் தாக்கிய மின்னலில் பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.