வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (16/05/2018)

கடைசி தொடர்பு:13:19 (16/05/2018)

புதுச்சேரி அமைச்சர்களின் ஒன்றரை வருட விமானச் செலவு எவ்வளவு தெரியுமா ?

புதுச்சேரி முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் கடந்த ஒன்றரை வருடத்தில் விமானப் பயணத்துக்கான செலவு செய்தத் தொகை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியாகியிருக்கிறது.

புதுச்சேரி

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் கடந்த ஒன்றரை வருடத்தில் எத்தனை முறை விமானப் பயணம் மேற்கொண்டார்கள், அதற்கு எவ்வளவு தொகை செலவாகியிருக்கிறது என்ற விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்று வெளியிட்டிருக்கிறது ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்பு உணர்வு அமைப்பு. சுகாதாரத்துறை அமைச்சரும், ஏனாம் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏவுமான மல்லாடி கிருஷ்ணாராவ் டெல்லி, விசாகப்பட்டினம், ஐதராபாத் என 163 முறை விமானப் பயணம் செய்து முதலிடத்தில் இருக்கிறார். அவருக்காக செலவிடப்பட்டிருக்கும் தொகை 13 லட்சத்து 99 ஆயிரத்து 143 ரூபாய். இவர் ஏற்கெனவே தான் தங்குவதற்காக புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறை இல்லத்தை 18 லட்சத்து 15 ஆயிரத்து 100 ரூபாய் அரசுப் பணத்தைச் செலவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் நாராயணசாமி 120 முறை டெல்லிக்குச் சென்றிருக்கிறார். அதற்காக செலவிடப்பட்ட விமானக் கட்டணம் 22 லட்சத்து 55 ஆயிரத்து 155 ரூபாய்.

புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஜான்குமார் 35 முறை விமானத்தில் பறந்திருக்கிறார். அதற்காக செலவிடப்பட்டுள்ள தொகை 2 லட்சத்து 76 ஆயிரத்து 516 ரூபாய். 30 முறை பயணம் செய்த சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு 9,73,913 ரூபாயும், 40 முறை பயணம் செய்த பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயத்துக்கு 4,32,875 ரூபாயும், 26 முறை பயணம் செய்த சுற்றுலா மற்றும் தொழில்துறை அமைச்சர் ஷாஜகானுக்கு 85,44,144 ரூபாயும், 20 முறை பயணம் செய்த விவசாயம் மற்றும் கல்வித்துறை அமைச்சரான கமலக்கண்ணனுக்கு 2,29,793 ரூபாயும், 21 முறை பயணம் செய்த முதல்வரின் பாராளுமன்றச் செயலருக்கு 2,04,784 ரூபாயும், 2 முறை பயணம் செய்த அரசு கொறடா அனந்தராமனுக்கு 26,434 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. கடந்த 1.8.2016 முதல் 31.12.2017 வரையிலான 16 மாதத்தில் 66,52,666 ரூபாய் விமானப் பயணத்துக்குச் செலவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் கடந்த ஒன்றரை வருடத்தில் 457 முறை விமானப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க