மூன்று பெண்களின் தாலிக்கொடிகளை அபகரித்த கொள்ளையர்கள்!

இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த ஆறரை பவுன் தாலிக்கொடியை பறித்துச் சென்றனர். 

 கொள்ளையர்கள்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்காவுக்கு உட்பட்ட ஆலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வாங்கிலியப்பன் என்பவரது மனைவி ராசாம்பாள். இவர் அருகில் உள்ள குட்டக்கடை பகுதியில் இருந்து ஆலம்பாளைத்துக்கு தனது இருசக்கர மோட்டார் வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, இவரைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கண் இமைக்கும் நேரத்தில் ராசாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த ஆறரை பவுன் தாலிக்கொடியை அறுத்துக்கொண்டு பறந்துவிட்டனர்.

இதனால், தடுமாறி கீழே விழுந்த ராசாம்பாள், அவரது தாலிக்கொடியை அறுத்துச் சென்ற மர்ம நபர்கள் சென்ற திசையைப் பார்த்து அழுதார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இந்நிலையில், கரூர் மாவட்டம், காவல்காரன்பட்டியில் மெக்கானிக்காக இருக்கும் கோபிநாத் என்பவர் வீட்டில் நள்ளிரவில் புகுந்த நான்கு கொள்ளையர்கள், தூங்கிக்கொண்டிருந்த கோபிநாத்தின் மனைவி பிரியாவை தாக்கி, அவரது கழுத்தில் இருந்த மூன்று பவுன் செயின், கோபிநாத்தின் தாயார் நிமிலா கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிக்கொடி மற்றும் வீட்டு பீரோவில் இருந்த 3.92 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தையும் திருடிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் தோகைமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

இதுபற்றி, அச்சத்தோடு பேசும் பொதுமக்கள் சிலர், 'இப்படி தொடர்ச்சியாக கரூரில் அடுத்தடுத்த பெண்களைக் குறி வைத்து திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் நடந்தேறுகின்றன. நாங்கள் தாலிக்கொடிகளுக்கு பாதுகாப்பில்லாமல் இருக்கிறோம். ரோட்டுல வாகனத்தில் போனாலும் சரி, வீடுகள்ல கதவை சாத்திகிட்டு படுத்திருந்தாலும் சரி, கொள்ளையர்களால் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றால் நாங்க எங்கதான் போய் இருப்பது? கரூர் காவல்துறை மோசமாக இருப்பதையே இந்தத் தொடர்ச்சியான சம்பவங்கள் காட்டுகின்றன. இந்த நிலை தொடர்ந்தால், கையாலாகாத கரூர் காவல்துறையைக் கண்டித்து மிகப்பெரிய போராட்டத்தை பெண்கள் அனைவரும் திரண்டு நடத்துவோம்' என்று காட்டமாக தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!