கனமழை எதிரொலி - சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்லத் தடை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மிகவும் பிரசித்திபெற்ற சிவாலயமாகும். விசேஷ காலங்களில் இங்கு கிரிவலம் சென்று கடவுளை வணங்க லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுவதுமிருந்து திரண்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அமாவாசை நாள்களில் பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது.

சதுரகிரி

ஆனாலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கோயில் அமைந்துள்ளதாலும், ஆபத்து மிகுந்த பகுதி என்பதாலும் வனத்துறையின் அனுமதி இல்லாமல் யாரும் செல்ல முடியாது. கடந்த சில நாள்களாக மலைப் பகுதியில் கன மழை பெய்ததால் மாங்கனி ஓடை, சங்கிலிப்பாறை, கருப்பசாமி கோயில் பாறை உட்பட பல பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இது ஆபத்தை உண்டாக்கும் என்பதால் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் நான்கு நாள்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், நான்காவது நாளான இன்று பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி மறுத்துள்ளது. நேற்று கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் 500-க்கும் மேற்பட்டோர் மழை காரணமாக மலைக் கோயிலிலேயே தங்கியுள்ளனர். அவர்களைப் பாதுகாப்பாக அடிவாரத்துக்குக் கொண்டு வர வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!