Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமல்ஹாசன் கூட்டத்தில் நானா? - ஆதங்கப்பட்ட ஆர்.நல்லகண்ணு

`விவசாயச் சங்கங்கள் கூட்டத்துக்கு நான் தலைமையேற்கப்போகிறேன்’ என்ற கமல்ஹாசன் அறிவிப்புக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்துள்ளார். 

நல்லக்கண்ணு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தொடர்ச்சியாகக் காலம் தாழ்த்தி வந்தநிலையில், அதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அதுதொடர்பான வழக்கில், மே 14-ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வரைவுத் திட்டத்தை சீல் செய்யப்பட்ட கவரில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதுகுறித்த வழக்கு இன்று (16.5.2018) விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஒருங்கிணைக்கும் விவசாயச் சங்கங்கள் கூட்டம் 19-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கமல்ஹாசன்

அதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமை தாங்குவார் என்று கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இந்தநிலையில், கமல்ஹாசன் அறிவிப்புக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறுப்பு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், 'கடந்த 13-ம் தேதி விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் சிலர் நல்லகண்ணுவை அவரது இல்லத்தில் சந்தித்து காவிரி நதிநீர் பிரச்னை உள்ளிட்ட கோரிக்கைகளைத் தெரிவித்தனர். அவற்றைக் கேட்ட நல்லகண்ணு, இந்த விவகாரம் தொடர்பாகத் தி.மு.க தலைமையில் 9 கட்சிகள் ஒருங்கிணைந்து போராடுவதாகத் தெரிவித்தார்.

அந்தச் சந்திப்பின்போது மாநாட்டில் பங்கேற்க அவர் ஒப்புதல் அளிக்கவில்லை' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக நல்லகண்ணுவைத் தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, "விவசாயச் சங்கங்கள் கூட்டத்துக்கு நான் தலைமையேற்கப்போகிறேன் என்ற கமல்ஹாசன் அறிவிப்புக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. முதலில் விவசாயச் சங்கத்தினர்தான் தனிப்பட்ட முறையில் என்னை சந்தித்துப் பேசியிருந்தனர். கமல்ஹாசனின் அறிவிப்புக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அதுபற்றி எனக்குத் தெரியாது" என்று தெரிவித்தார்.  

காவிரி விவகாரம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான போராட்டங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க-வுடன் இணைந்தே போராடிவருகிறது. மேலும், காங்கிரஸ் மற்றும் தி.மு.க-வுடன் இணக்கமாக இருந்து வருகிறது. இந்த இணக்கம் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் ஒருங்கிணைக்கும் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பங்கேற்கிறார் என்ற விவகாரம் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அக்கட்சி மறுப்பு அறிக்கை வெளியிட்டு பரபரப்புக்கு முற்றுப் புள்ளி வைக்க முயற்சி செய்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement