வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (16/05/2018)

கடைசி தொடர்பு:17:20 (16/05/2018)

`மகளின் காதலுக்குத் துணைபோனதால் மனைவியை எரித்துக் கொன்றேன்’ - அதிரவைக்கும் கணவனின் வாக்குமூலம்

திருச்சியைச் சேர்ந்த சேகர் என்பவர் தன் மகளையும் மனைவியையும் திட்டமிட்டு எரித்த சம்பவம், திருச்சியத் திகிலடைய வைத்துள்ளது.
 
 
திருச்சி பாலக்கரை எடத்தெருவைச் சேர்ந்தவர் சேகர் என்ற விஜயசேகர். 50 வயதான இவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த 13-ம் தேதி இரவு அவரது பேக்கரியில் அவரின் மனைவி மல்லிகாவும் மகள் சுவாதியும் உடல்கருகிய நிலையில் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்தனர். அதைப் பார்த்துப் பதறிய சேகர் சத்தம் போட்டார். அதையடுத்து உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த மல்லிகாவையும் சுவாதியையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேகர் சேர்த்தார். சிகிச்சைப் பலனின்றி சேகரின் மனைவி மல்லிகா நேற்று முந்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக இந்தச் சம்பவம் குறித்து திருச்சி முதலாவது நீதித்துறை நடுவர் நேரில் விசாரணை நடத்தியதுடன், மல்லிகா மற்றும் சுவாதியிடம் வாக்குமூலம் வாங்கினார். அப்போது அவரின் மனைவி, “கணவர் சேகர் வெளியில் சென்றிருந்தார். கடையில் நானும் மகள் சுவாதியும் இருந்தோம். இரவு 10 மணிக்கு பேக்கரி கடையில் இருந்த ஃப்ரிட்ஜ் ஸ்விட்சை அணைக்க முயன்றபோது, தீப்பிடித்துவிட்டது” எனக் கூறியிருந்தார். 
 
இந்நிலையில், சேகரின் மகள் சுவாதி கர்ப்பிணி என்றும், அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். 
மேலும், மல்லிகா, சுவாதி இருவரின் உடல்கள் கருகியதில் சந்தேகம் இருப்பதாகவும் தானும் சுவாதியும் பதிவுத் திருமணம் செய்துகொண்டதாகவும், அதில் சுவாதி கர்ப்பமாக இருந்த நிலையில், இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் திருச்சி சிறப்பு கமாண்டோ படை காவலரான தங்கவேலு என்பவர் புகார் கொடுத்தார். இந்நிலையில் போலீஸார், சேகரின் பேக்கரி கடையில் விசாரணை நடத்தியபோது, பெட்ரோல் வாசனை வந்துள்ளது. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மல்லிகா, சுவாதி சேலையிலும் பெட்ரோல் வாசனையே வந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீஸார், சேகரை அழைத்து விசாரணை நடத்தினர். 
 
சேகர்
 
விசாரணையில் சேகர் அளித்த வாக்குமூலம் பலரையும் அதிரவைத்தது. திருச்சியை அடுத்துள்ள பனையக்குறிச்சியைச் சேர்ந்த தங்கவேலுவும் சுவாதியும் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி பதிவுத் திருமணம் செய்துள்ளார்கள். இந்தத் தகவலை பெற்றோருக்குத் தெரியப்படுத்தாமல், ‘அலைபாயுதே’ திரைப்பட பட பாணியில்  தங்கள் வீடுகளில் தனித்தனியே வாழ்ந்து வந்துள்ளனர். தங்கவேலு தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். இருவருக்கும் இடையே உள்ள காதல் அதிகமாகி, இருவருக்கும் நெருக்கம் அதிகமானது. மேலும், இதனிடயே காவலர் தங்கவேலு தனது திருமண விஷயத்தை அவரின் பெற்றோரிடம் தெரிவிக்க, பெற்றோர் சமாதானமாகி, காதலை ஏற்றுக்கொண்டனர். ஆனால், சுவாதியின் தந்தை சேகரிடம் சுவாதி தங்கள் காதல் விவகாரத்தைச் சொல்ல பயந்து தள்ளிப்போட்டு வந்தார்.

இந்நிலையில் சுவாதி அடிக்கடி கணவர் தங்கவேலு வீட்டுக்குச் சென்றுவருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதன் காரணமாக, சுவாதி கர்ப்பம் ஆனார். நாள்கள் ஆக ஆக வயிறு பெருசாகவே, சுவாதியின் தாய், மல்லிகாவுக்கு விஷயம் தெரியவந்துள்ளது. அதையடுத்து சுவாதி, தாய் மல்லிகாவிடம் விஷயத்தைக் கூறி, தன் காதலுக்கும் தனக்கும் உதவி செய்யக் கோரியுள்ளார். இதுகுறித்து தன் கணவரிடம் சொல்லி சம்மதம் வாங்கிட காத்திருந்தார். இதுகுறித்து சில வாரங்களுக்கு முன்பு, கணவர் சேகரிடம், மகள் சுவாதி திருமணம் மற்றும் கர்ப்பம் குறித்து சேகரின் மனைவி மல்லிகா கூறியிருக்கிறார். அதைக்கேட்டு கோபமடைந்த சேகர், கோபத்தில் மனைவியைத் திட்டித் தீர்த்தார். ஆனாலும், அவர் சமாதானம் ஆகவேயில்லை. மகள் சுவாதி வீட்டில் இருந்துவந்தார். அவர்மீது சேகர் கோபத்தைக் காட்டவில்லை. இந்நிலையில், சுவாதியுடன் தன் மருமகன் தங்கவேலு வீட்டுக்குச் சென்ற மல்லிகா, அங்கு தங்கவேலு மற்றும் அவரின் பெற்றோரைச் சந்தித்து, இப்போதுதான் என் கணவரிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறேன். எல்லாம் சரியாகும். விரைவில் சுவாதியை உங்கள் வீட்டு மருமகளாக அனுப்பி வைக்கிறேன்” என மல்லிகா தங்கவேலு வீட்டாரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. தங்கவேலுவை அழைத்து சேகர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 13-ம் தேதி இரவு சுவாதியும் மல்லிகாவும் தங்கவேலு வீட்டுக்குச் சென்றுவந்த தகவல் தெரியவரவே, சேகர் ஆத்திரமடைந்தார். அடுத்து இருவரையும் தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். 

இதுகுறித்து சேகர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், “மகள் சுவாதி காதல் திருமணம் செய்தது எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் மல்லிகா, சுவாதியின்  திருமணம் கர்ப்பம் குறித்து என்னிடம் கலந்து பேசாமல் தங்கவேலுவின் குடும்பத்தினரை சந்தித்து சமாதானம் பேசியது துளியும் பிடிக்கல. இது என்னைக் கூடுதலாகக் கோபமடைய வைத்தது. அதையடுத்துதான்  மல்லிகாவையும் சுவாதியையும் தீர்த்துக்கட்ட முடிவெடுத்தேன். அதற்கான தருணத்துக்காகக் காத்திருந்தேன். 13-ம் தேதி இரவு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி, கடைக்குள் இருந்த ஃப்ரிட்ஜ் அருகே ஊற்றி வைத்துவிட்டேன். கடைக்குள் மல்லிகாவும் மகள் சுவாதியும் இருக்க, கடைக்கு வெளியில் நின்றுகொண்டிருந்த நான், ஃப்ரிட்ஜை திறந்து  ஒரு பொருளை எடுத்துக்கொடு மல்லிகா என்றேன். அதன்படி மல்லிகா ஃப்ரிட்ஜை திறந்ததும், வெளியில் நின்றுகொண்டிருந்த நான் சிகரெட் பற்ற வைக்கும் லைட்டரை பற்ற வைத்து பெட்ரோல் கிடந்த இடத்தில் வீசினேன். அதையடுத்து தீ மல்லிகாவின் சேலையில் தீப்பற்றி எரிந்ததும், அருகில் இருந்த மகள் சுவாதி மல்லிகாவைக் காப்பாற்றப் போக அவளும் தீயில் கருகினாள். பிறகு, வெளியில் நின்றிருந்த நான், தற்செயலாக வருவதுபோல நடித்து இருவரையும் காப்பாற்றி அவர்களை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்த்தேன்” என்றார். இதைச் சேகர், திருச்சி 5வது நீதித்துறை நடுவர் நீதிபதி நாகப்பன் வீட்டில் முன்னிலையில் வாக்குமூலமாகக் கொடுக்க, அவர் 15 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சேகர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மகளின் காதலுக்கு துணைபோன மனைவியையும் காதலையும் கர்ப்பத்தையும் மறைத்த மகளையும் அப்பாவே பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க