வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (16/05/2018)

கடைசி தொடர்பு:15:04 (18/05/2018)

`ஆடம்பர வாழ்க்கைக்காக டாக்டர்களை மிரட்டினோம்' - சென்னை இன்ஜினீயர்கள் பகீர் வாக்குமூலம் 

 இன்ஜினீயர்கள்

சென்னையில் ஆடம்பர வாழ்க்கைக்காக டாக்டர்களை மிரட்டி பணம் பறித்த இன்ஜினீயர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். 

 சென்னை உத்தண்டி, கிழக்குக் கடற்கரை சாலையைச் சேர்ந்தவர் டாக்டர் ஹரீஷ். இவர். உத்தண்டியில் உள்ள பல் மருத்துவமனையில் பணியாற்றுவதோடு சோழிங்கநல்லூரில் க்ளினிக்கும் நடத்திவருகிறார். கடந்த 2-ம் தேதி ஹரீஷுக்கு மர்ம நபரிடமிருந்து போன் அழைப்பு வந்தது. அதை எடுத்து அவர் பேசியபோது, பணம் கேட்டு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹரீஷ், நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார். உடனடியாகப் போலீஸார் அங்கு சென்று விசாரித்தனர். மறுநாள் (3.5.2018) ஹரீஷ், கானத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்போது மர்ம நபர் பேசிய ஆடியோவையும் போலீஸாரிடம் கொடுத்தார்.

அதன்பேரில் உதவி கமிஷனர்கள் சுப்புராயன், சீனிவாசலு தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ரியாசுதின், கௌதமன், பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழன்பன், பாலு, இளமதி, காவலர்கள் ராஜசேகரன், செந்தில்குமார், மஹாவீர் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீஸார்  போனில் மிரட்டல் விடுத்த மர்ம நபரை தீவிரமாகத் தேடிவந்தனர். டாக்டரின் செல்போனுக்கு வந்த மிரட்டல் போன் அழைப்பின் நம்பரை முதலில் போலீஸார் ஆய்வு செய்தனர். அந்தப் போன் நம்பரின் முகவரிக்குச் சென்று விசாரித்தனர். அப்போது, மிரட்டல் சம்பவத்துக்கும் அந்த நபருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரியவந்தது. இதனால் போலீஸார் குழப்பம் அடைந்தனர். இதையடுத்து, சிம் கார்டு மூலம் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். அப்போதுதான், முக்கிய தடயம் போலீஸாருக்குக் கிடைத்தது. 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தவரின் ஆடியோவை டாக்டர் எங்களிடம் கொடுத்தவுடன் அதில் பேசியவர் யார் என்பதைக் கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டது. மிரட்டலுக்குப் பயன்படுத்திய சிம்கார்டின் முகவரிக்குச் சென்று விசாரித்தபோது அவருக்கும் இந்த மிரட்டலுக்கும் எந்தவித தொடர்புமில்லை என்று தெரியவந்தது. இதனால் தாம்பரத்தில் சிம்கார்டு வாங்கிய விவரம் கிடைத்ததும் அங்கு சென்று விசாரித்தோம். அப்போதுதான்  நாங்கள் விசாரித்த நபரின் பெயரில் அவருக்கே தெரியாமல் இன்னொரு சிம்கார்டு வாங்கியது தெரியவந்தது. இதனால் செல்போன் சிக்னல், மிரட்டலுக்குப் பயன்படுத்திய சிம்கார்டை வாங்கியவர்கள் யார் என்று விசாரிக்கத் தொடங்கினோம்.

அப்போதுதான் பம்மல் அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த முருகன் குறித்த தகவல் கிடைத்தது. முருகன், சென்னை தரமணியில் டிப்ளோமா இன்ஜினீயரிங் படித்துள்ளார். தற்போது, பி.ஏ கிரிமினாலஜி படித்துவருகிறார். இவரின் வீட்டில் வறுமை என்பதால் கல்விக் கட்டணம்கூட செலுத்த வழியில்லாமல் பல நேரங்களில் தவித்துள்ளார். மேலும் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசையில்தான் சென்னையில் பிரபலமாகாத டாக்டர்களை மிரட்டி பணம் பறிக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்கு உதவியாக முருகனின் நண்பர், குரோம்பேட்டையைச் சேர்ந்த பாலாஜியும் இருந்துள்ளார். பாலாஜியும் முருகனும் தரமணியில் ஒரே கல்லூரியில் டிப்ளோமா இன்ஜினீயரிங் படித்துள்ளனர். இவர்கள் இருவரும் 20-க்கும் மேற்பட்ட டாக்டர்களை மிரட்டியுள்ளனர். அதில் சில டாக்டர்கள் மிரட்டலுக்குப் பயந்து பணமும் கொடுத்துள்ளனர். இந்தப் பணத்தில் கார், செல்போன், உடை என ஆடம்பரமாகவும் வசதியாகவும் வாழ்ந்துள்ளனர். காரில் சென்றுதான் டாக்டர்களின் தகவல்களை இவர்கள் இருவரும் சேகரித்துள்ளனர். இவர்கள் பயன்படுத்திய போலி சிம்கார்டு குறித்து சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்துக்கும் புகார் கொடுத்துள்ளோம். இவர்களிடமிருந்து விலை உயர்ந்த செல்போன்கள், சிம்கார்டுகளைப் பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர்.